வைக்கம் பெரியார் நினைவகம் திறப்பு- டிச.12-ல் கேரளா செல்லும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

post-img

சென்னை: கேரளா மாநிலம் வைக்கத்தில் சீரமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் திறப்பு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 12-ந் தேதி அம்மாநிலத்துக்கு செல்கிறார். தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.8.5 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் நினைகம் திறப்பு மற்றும் தந்தை பெரியார் நூலகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கேரளா முதல்வர் பினராயி விஜயனும் பங்கேற்க இருக்கிறார்.
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம், சரித்திரத்தில் இடம் பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சியில் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இந்த வைக்கத்தில் உள்ள மகாதேவா என்கிற சிவன் கோயிலைச் சுற்றி இருந்த தெருக்களிலே தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்று சொல்லப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் நடப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை தகர்க்க நடந்த போராட்டமே வைக்கம் போராட்டம்.

1924-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிதான் அன்று இந்தப் போராட்டத்தை தொடங்கியது. இதன் பின்னர் கேரளா காங்கிரஸ் கட்சியின் அழைப்பை ஏற்று தந்தை பெரியார் தமிழ்நாட்டில் இருந்து சென்று வைக்கம் போராட்டத்தில் பங்கேற்றார். வைக்கம் கோவில் நுழைவுப் போராட்டமானது தந்தை பெரியாரின் வருகைக்குப் பின்னர் படுதீவிரமடைந்தது. இதனால் தந்தை பெரியாருக்கு வைக்கத்தில் தடை விதிக்கப்பட்டது. போராட்ட இயக்கத்திற்குப் புத்துயிர் கிடைத்தது.
சாதாரண மக்களுக்கும் புரியும்படியாகப் பேசிய தந்தை பெரியாரது உரையானது மக்களிடையே பெரும் எழுச்சியை உண்டாக்கியது. இதனால் மிரண்டு போன அன்றைய - அரசாங்கம் பெரியார் பேசுவதற்குத் தடை விதித்தது. கோட்டயம் மாவட்டத்திற்குள் பெரியார் நுழையவும் தடை போடப்பட்டது. இந்தப் போராட்டத்தை நடத்தியதால் தந்தை பெரியார் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். தந்தை பெரியாருடன் அவரது துணைவியார் நாகம்மையாரும் கைது செய்யப்பட்டு 4 மாதம் சிறை தண்டனை அனுபவித்தார். இதனால்தான் சரித்திரத்தின் பக்கங்களில் 'வைக்கம் வீரர்' என்ற பெரும் புகழ் பெற்றார் தந்தை பெரியார்.
வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்களிப்பை நினைவூட்டும் வகையில் பெரியாருக்கு வைக்கத்தில் ஏற்கனவே நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு நினைவகம் திறந்து வைக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு அரசு ரூ.8.5 கோடியில் சீரமைத்துள்ளது.

இந்த சீரமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் தந்தை பெரியார் நூலகம் ஆகியவற்றை வரும் 12-ந் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக வைக்கம் செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு மற்றும் கேரளா அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

Related Post