வண்டலூருக்கு வரப்பிரசாதம்.. 7டி தியேட்டரில், கூலிங் கிளாசுடன் சினிமா பார்க்கறது யார் பாருங்க.. சபாஷ்

post-img
சென்னை: வண்டலுார் உயிரியல் பூங்காவில், வனத்துறை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டதுடன், 180 கி.வோ., திறன்கொண்ட சூரிய மின் நிலையத்தையும் திறந்து வைத்தார்.. அதேபோல, புதுப்பிக்கப்பட்டு வரும் விலங்கு கூடம், வேடந்தாங்கல் பறவை கூண்டு ஆகியவற்றையும் பார்வையிட்டார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிய வகை மிருகங்கள் பல உள்ளன.. 2,400 மிருகங்கள் இங்கு தற்போது வரை பராமரிக்கப்பட்டு வருகின்றன.. அதேபோல அரியவகை பறவைகளும் உள்ளன.. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் இவைகளை கண்டு களிப்பதற்காகவே வண்டலூர் திரண்டு வருவார்கள். முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த பூங்காவை ஆர்வத்துடன் காட்டி மகிழ்வார்கள். பார்வையாளர்கள்: தினசரி 2500 முதல் 3000 பேர் வரை இந்த பூங்காவுக்கு பார்வையாளர்களாக வந்து செல்கிறார்கள்... விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் 10 ஆயிரம் பேர்கூட வந்து செல்கிறார்கள். கடந்த வருடம் புவனேஸ்வரில் நடந்த தேசிய உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மாநாட்டில், நாட்டின் சிறந்த பூங்கா என்கிற விருதையும் பெற்றுள்ள இந்த பூங்காவை, மேலும் மேம்படுத்திட பல்வேறு திட்டங்கள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டுள்ளன.அந்தவகையில், ரூ.4.36 கோடி ரூபாய் செலவில், 3டி மற்றும் 7டி திரையரங்கம் அமைக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்து, அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. நிதி ஒதுக்கீடு: பார்வையாளர்கள் புதிய வழிமுறையில் வனவிலங்குகளை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட பூங்கா அருங்காட்சியகத்தில், பல்வேறு உயிரினங்களின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்படும் என்றும் இதற்காக ரூபாய் 4.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு அரசாணை வெளியிட்டும் இதனை கூறியிருந்தார். அதன்படியே, தொழில்நுட்ப தியேட்டர் கட்டும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.. பூங்காவிற்கு வருவோர், விலங்குகளை நேரடியாக கண்டு ரசிப்பதுடன், அவை தொடர்பான திரைப்படங்களை நவீன தொழில் நுட்பத்தில் பார்த்து ரசிக்கும் வகையில், 7டி தியேட்டர் கட்டப்பட்டுள்ளது.. மொத்தம் 4 கோடி ரூபாய் செலவில், 32 இருக்கைகளுடன் இந்த தியேட்டர் கட்டப்பட்டிருக்கிறது.. தியேட்டர் திறப்பு: அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த தியேட்டரை அமைச்சர் பொன்முடி தற்போது திறந்து வைத்துள்ளார்.. தியேட்டரை திறந்து வைத்ததுடன், அதில் அமர்ந்து விலங்குகள் தொடர்பான, 3 நிமிட சினிமாவையும் பார்த்து ரசித்தார். பின்னர், வண்டலுார் உயிரியல் பூங்காவில் 180 கி.வோ., திறன்கொண்ட சூரிய மின் நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர், புதுப்பிக்கப்பட்டு வரும் விலங்கு கூடம், வேடந்தாங்கல் பறவை கூண்டு ஆகியவற்றையும் பார்வையிட்டார்.. இதைத்தொடர்ந்து நீலகிரி வரையாடுகளின் முதல் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு மற்றும் வரையாடு அஞ்சல் தலையையும் வெளியிட்டார். திட்டப்பணிகள்: தமிழக மாநில விலங்காகவும், அழிந்து வரும் இனங்களில் ஒன்றாகவும் உள்ள நீலகிரி வரையாடுகளை பாதுகாக்கும் பொருட்டு, நீலகிரி வரையாடு திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த திட்ட பணிகள் அனைத்தும் 25.14 கோடி ரூபாய் செலவில், 9 முக்கிய கூறுகளுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நாளுக்கு நாள் வண்டலூர் பூங்காவின் தரமும், வசதிகளும் உயர்ந்து வருவது சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. ஆனால் அமைச்சர் பொன்முடியின் வாகனத்தை சிலர் திடீரென சூழ்ந்துவிட்டதால் வண்டலூரில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது வண்டலுார் பூங்காவில் 200க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்கள், கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக வேலை செய்து வருகிறார்கள்.. ஆபத்தான விலங்குகளை பாதுகாக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டு வந்தாலும், குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறதாம்.. பணி நிரந்தரமும் செய்யப்படவில்லையாம்.. சமாதானம்: அதனால், பணி நிரந்தரம் கோரியும், ஊதியத்தை அதிகப்படுத்தக்கோரியும் நீண்ட காலமாகவே போராடி வருகிறார்கள். நேற்று அமைச்சர் பொன்முடி வண்டலூர் பூங்கா வருவதை அறிந்த தினக்கூலி பணியாளர்கள் மொத்த பேரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அமைச்சர் வந்ததுமே அவரது வாகனத்தையும் முற்றுகையிட்டு, தங்களது கோரிக்கைகளை சொன்னார்கள்.. ஒருசிலர் கோரிக்கையுடன் கண்ணீர் விட்டபடியே அமைச்சரின் காலிலும் விழுந்தனர்.. அவர்களை சமாதானம் செய்த அமைச்சர் பொன்முடி, கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறதி கூறிவிட்டு சென்றார். இதனால் வண்டலூர் பூங்காவில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Related Post