அமெரிக்காவில் தங்கம் விலை சரியுது.. ஆனா இந்தியாவில் மட்டும் அதிகரிக்குதே ஏன்? ஆனந்த் சீனிவாசன் நறுக்

post-img
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைகிறது. பொதுவாகத் தங்கம் என்பது சர்வதேச அளவில் ஒரே போல தான் இருக்கும். ஆனால், இப்போது ஏன் அந்த டிரெண்ட் மாறுகிறது என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்கான பதிலை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்ற பிறகு சில வாரங்கள் தொடர்ந்து சரிந்த தங்கம் விலை, ஒரு கட்டத்தில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7000க்கு கீழ் கூட சென்றது. ஆனால், சில நாட்களில் அது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. தங்கம் விலை: அதிலும் குறிப்பாகக் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை கணிசமாக அதிகரித்தே வருகிறது. நேற்று முன்தினம் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15 அதிகரித்து ரூ.7310க்கு விற்பனையான நிலையில், நேற்று தங்கம் விலை மேலும் ரூ. 75 அதிகரித்து ரூ. 7205க்கு விற்பனையானது. அதேநேரம் அமெரிக்காவில் நேற்று மட்டும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 4 டாலர் வரை குறைந்தது. பொதுவாக தங்கம் விலை என்பது சர்வதேச அளவில் கிட்டதட்ட ஒரு மாதிரி தான் இருக்கும். ஆனால், இப்போது மட்டும் ஏன் அமெரிக்காவில் தங்கம் விலை குறையும் நிலையில், இந்தியாவில் மட்டும் அதிகரிக்கிறது என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் சேனலில், "தங்க இ.டி.எஃப்களை உலகெங்கும் விற்கிறார்கள். இதனால் தங்கம் விலை சர்வதேச 5 முதல் 7 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும் நாம் தங்கத்தைத் தொடர்ந்து வாங்கிக் கொண்டே இருக்கிறோம். இதை முதலீடாகக் கருதி ஒரு தரப்பினர் வாங்குகிறார்கள். விலை குறைந்துள்ளதால் இப்போது மக்கள் தங்கத்தை வாங்குகிறார்கள். திருமண சீசன் என்பதால் இன்னொரு தரப்பினர் தங்கத்தை வாங்குகிறார்கள். இந்தியாவைப் போலச் சீனாவிலும் தங்கத்தை அதிகளவில் வாங்குகிறார்கள். அதாவது மேற்குலக நாடுகள் தங்கத்தை விற்கும் நிலையில், இந்தியாவும் சீனாவும் அதை தாங்கி பிடிக்கிறது. ஜெரோம் பவல்: அதேபோல வரும் டிச. 18ம் தேதி அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் நடைபெறுகிறது. அதில் என்ன முடிவெடுக்கப் படுகிறது என்பதும் முக்கியமானதாக இருக்கும். அமெரிக்க மத்திய வங்கி கவர்னர் ஜெரோம் பவல் முக்கிய முடிவுகளை அறிவிப்பார் எனச் சந்தை எதிர்பார்க்கிறது. டிரம்ப் கூட முதலே ஜெரோம் பவலை நீக்கப் போகிறேன் என்றெல்லாம் சொல்லி வந்தார். ஆனால், இப்போது அவரை 2026 மே மாதம் வரை ஜெரோம் பவல் மீது நடவடிக்கை எடுக்க மாட்டேன் எனக் கூறிவிட்டார். ஜன.20ம் தேதி அதிபராகப் பதவியேற்கும் டிரம்ப், பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்குவதை ரத்து செய்வது தொடர்பாகவே முதல் கையெழுத்தைப் போடுவேன் என்கிறார். டிரம்ப் இதுபோல நடவடிக்கைகளை எடுத்தால் அங்கே கீழ்மட்டத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்... ஊதியமும் அதிகரிக்கும். ஆனால், இதனால் பணவீக்கம் அதிகரிக்கும். பணவீக்கம் அதிகரித்தால் வட்டி பெரியளவில் குறைக்க முடியாது" என்றார். காரணம்: அதாவது அமெரிக்க வட்டி விகித குறைக்கப்படவில்லை என்றால் தங்கம் விலை பெரியளவில் அதிகரிக்காது. அமெரிக்காவில் எப்போது வட்டி விகிதம் வேகமாக குறைக்கப்படுகிறதோ.. அதன் பிறகே தங்கம் விலை சர்வதேச சந்தையில் மளமளவென உச்சம் தொடும். இதன் காரணமாகவே அமெரிக்காவில் தங்கம் விலை அதிகரிக்கவில்லை. அதேநேரம் இங்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிகிறது. இதன் காரணமாகவே அமெரிக்காவில் தங்கம் விலை குறைந்தாலும் இந்தியாவில் அது அதிகரிக்கிறது. இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Related Post