சென்னை: சென்னை தியாகராய நகர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலரின் மோட்டார் சைக்கிளை இரண்டு பேர் திருடி சென்றுள்ளார்கள். பாண்டி பஜார் காவல் நிலையத்தின் வாசலில் நிறுத்திவிட்டு சென்ற காவலரின் பைக்கை லாவகமாக திருடியவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.. சிசிடிவி கேமரா காட்சிளால் அடையாளம் கண்ட போலீசார் வண்டியோடு அவர்களை தூக்கி வந்தனர்.
சென்னை தியாகராய நகர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் சதீஷ். இவர் கடந்த டிசம்பர் 20-ந்தேதி இரவு, பாண்டி பஜார் காவல் நிலையத்தின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் காரில் ரோந்து பணிக்காக சென்றுள்ளார். இரவு முழுவதும் பாண்டி பஜார் பகுதியை சுற்றிலும் ரோந்து பணியில் ஈடுபட்டார். ரோந்து பணி முடிந்து மறுநாள் காலை 7 மணிக்கு காவல் நிலையத்துக்கு வந்தார். அப்போது, காவலர் சதீஷ் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் இருந்தது. யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பதை அவர் கண்டார்.
இதுகுறித்து காவலர் சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் பாண்டி பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து தெரியவந்தது. அதன் அடிப்படையில் மோட்டார் சைக்கிளை திருடியதாக தாமஸ்சாலையை சேர்ந்த சதீஷ், மணப்பாக்கத்தை சேர்ந்த ராம்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனமும் மீட்கப்பட்டது. போலீஸ் ஸ்டேசன் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காவலரின் வாகனத்தை, திருடர்கள் திருடி சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணா நகரில் தகராறில் ஈடுபட்டதை கண்டித்ததால் சப்-இன்ஸ்பெக்டரை கட்டையால் தாக்கிய இளைஞர் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள். சென்னை அண்ணாநகர், 7-வது மெயின் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 33 வயதாகும் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பி பாலாஜி (30). இவர், அண்ணன் பிரபு வீட்டில் தங்கி இருந்தபடியே பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 2 நாட்களாக பாலாஜி மதுபோதையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்து வந்தாராம்.
நேற்று முன்தினம் இரவும் பாலாஜி, குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அண்ணாநகர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், ரோந்து வாகனத்தில் அங்கு சென்று மது போதையில் தகராறு செய்து கொண்டிருந்த பாலாஜியை கண்டித்துள்ளார்.. இதனால் சப்-இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாலாஜி, அருகில் இருந்த சிறிய கட்டையால் ரமேசை தாக்கினாராம். பின்னர் அங்கிருந்து பாலாஜி தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் தலையில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பாலாஜியை தேடி வருகிறார்கள்.