நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவி வருவதால் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
இந்நிலையில் மணிப்பூர் விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் அறிமுகம் செய்து பேசினார். இதன் மீதான விவாதம் நேற்று காரசாரமாக நடைபெற்றது. காங்கிரஸ் தரப்பில் இன்று ராகுல் காந்தி பேசினார். அப்போது முதலில் என்னை மீண்டும் மக்களவையில் இணைத்ததற்காக சபாநாயகருக்கு நன்றி தெரிவித்தார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து பேசியவர், “நான் மணிப்பூருக்கு சென்றுவந்துவிட்டேன், இன்னும் பிரதமர் செல்லவில்லை. மணிப்பூர் இந்தியாவில் இல்லை என மத்திய அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. மணிப்பூரை மத்திய அரசு இரண்டாக பிரித்து வைத்திருக்கிறது. மணிப்பூர் மக்கள் கொல்லப்பட்டதன் மூலம் இந்தியாவையே குற்றவாளியாக்கி விட்டீர்கள். மணிப்பூருக்கு நீதி வழங்காவிட்டால் பாரத மாதாவை கொல்வதாகவே அர்த்தம். நீங்கள் பாரத மக்களை காப்பவர்கள் இல்லை. நீங்கள் பாரத மக்களை காப்பவர்கள் இல்லை. தேசத்தையும் , பாரத மாதாவையும் மணிப்பூரில் கொன்றுவிட்டனர்” எனக் கடுமையாக பேசினார்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் ஆட்சியின்போது டெல்லியில் நிர்பயா கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “ ராகுல் பேசியதை நான் கண்டிக்கிறேன். மணிப்பூர் உடையவில்லை. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். ராகுல் காந்தி நீங்கள் மட்டுமே இந்தியா அல்ல.மணிப்பூர் குறித்து காங்கிரசுக்கு கவலையில்லை. ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மிக மோசமான பேச்சை அவையில் கேட்டோம். அதனை நாங்கள் கண்டிக்கிறோம். காஷ்மீரி பண்டிட்களின் வலிகளை காங்கிரஸ் உணரவில்லை. அவர்களுக்கு ஒருபோதும் நீதி வழங்கவில்லை. என்றார்.