முடிவுக்கு வந்த 36 ஆண்டு சாதனை.. விஸ்வநாதன் ஆனந்தை பின்தள்ளிய 17 வயது வீரர்

post-img

ஃபிடே அமைப்பு சார்பாக நடத்தப்பட்டு வரும் செஸ் உலகக்கோப்பை தொடர் அஸர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதன் 2வது சுற்றுப் போட்டியில் 17வது வயதேயான இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், அஸர்பைஜானின் மிஸ்ரடின் இஸ்கந்த்ரோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 44வது நகர்த்தலின் போது குகேஷ் வெற்றிபெற்றார்.

இதனை சர்வதேச செஸ் சம்மேளனத்தின் லைவ் ரேட்டிங்கில் குகேஷ் 2755.9 புள்ளிகளுடன் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்தார். அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் செஸ் முகமாக உள்ள விஸ்வநாதன் ஆனந்த 2754.0 புள்ளிகளுடன் 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இது இந்திய விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் 1986ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிரவீன் தீப்சேவை விட அதிக புள்ளிகள் பெற்று விஸ்வநாதன் ஆனந்த சாதனை படைத்தார். அன்று முதல் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக விஸ்வநாதன் ஆனந்த இருந்து வந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 17 வயதேயான குகேஷ், விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.

ஃபிடே அமைப்பின் தரவரிசை பட்டியல் செப்.1ஆம் தேதியன்று வெளியிடப்படும். அதுவரையில் விஸ்வநாதன் ஆனந்தை விடவும் குகேஷ் முன்னிலையில் இருந்தால், இந்தியாவின் நம்பர் 1 வீரராக குகேஷ் சாதனை படைப்பார். அதேபோல் தரவரிசையில் மாற்றங்கள் நடக்க வாய்ப்பில்லை என்றே ஃபிடே அமைப்பு சார்பாக கூறப்படுகிறது.

விஸ்வநாதன் ஆனந்த் குருவாக கொண்டுள்ள குகேஷ், விஸ்வநாதன் ஆனந்தையே தரவரிஉசையில் முந்திருயிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆசிரியரை மிஞ்சிய மாணவன் என்று பலரும் குகேஷிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கடந்த ஆண்டு நடைபெற்ற எயிம்செஸ் ரேபிட் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி குகேஷ் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.


Related Post