தேனி: கேரளாவின் புகழ் பெற்ற மலைவாசல் சுற்றுலா தலங்களில் ஒன்றான மூணாறில் ஒரு சொகுசு விடுதிக்கு ஆண் நண்பர்களுடன் சென்றுள்ளனர் இரண்டு பள்ளி மாணவிகள்.. மூணாறில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வட்டவடா என்ற சுற்றுலா தலத்தில் உள்ள சொகுசுவிடுதியில் இருந்து இரண்டு மாணவிகளும் மீட்கப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்கள் மூலம் காதல் என்ற பெயரில் பழகும் மாணவிகளுக்கு இந்த சம்பவம் பாடம் ஆகும்.
தமிழக எல்லையை ஒட்டிள்ள மூணாறு புகழ் பெற்ற கோடைவாசல் சுற்றுலா தலம் ஆகும்.தேனியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த சுற்றுலா தலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மூணாறு நகரில் உள்ள ஒரு பள்ளியில், பள்ளி முடிந்து, நேற்று முன்தினம் மாணவ-மாணவிகள் வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளி அருகே ஒரு கார் வந்தது. அந்த காரில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் இருந்தனர். இவர்கள், 9-ம் வகுப்பு படிக்கிற 16 வயதுடைய குறிப்பிட்ட 2 மாணவிகளை சந்தித்து பேசினார்கள்.
சிறிது நேரத்தில் அந்த காரில், 2 மாணவிகளும் ஏறினர். மின்னல் வேகத்தில், தேவிகுளம் நோக்கி அந்த கார் சென்றது. இதனைக் கண்ட சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்து ஆசிரியர்களுக்கு தெரிவித்தனர். இதனையடுத்து மாணவிகள் 2 பேரை காரில் கடத்தி செல்வதாக நினைத்த ஆசிரியர்கள் உடனடியாக தேவிகுளம் போலீஸ் நிலையத்துக்கு புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் உஷார் அடைந்தனர். அந்த காரின் நிறம் மற்றும் பதிவு எண்களை அடிப்படையாக கொண்டு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். மூணாறு அருகே உள்ள வட்டவடை பகுதியில் அந்த கார் செல்வது போலீசாருக்கு தகவல் வந்தது.
இதைத்தொடர்ந்து அந்த காரை பின்தொடர்ந்து போலீசார் தங்களது வாகனங்களில் விரட்டி சென்றார்கள். மூணாறில் இருந்து சுமார் 48 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற வட்டவடையில் உள்ள தங்கும் விடுதி முன்பு அந்த கார் நின்றிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.அந்த தங்கும் விடுதிக்கு, மாணவிகளை 2 இளைஞர்கள் காதல் என்ற பெயரில் ஏமாற்றி அழைத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விடுதி அறைகளில் சோதனை நடத்தி 2 மாணவிகளையும் அதிரடியாக மீட்டனர்.
இதேபோல் மாணவிகளுடன் அறையில் இருந்த 2 வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் , திருவனந்தபுரம் கிளிமானூர் பகுதியை சேர்ந்த முகமது அலி (வயது 26), கொல்லம் ஆயுர்கொக்காட் பகுதியை சேர்ந்த அன்வர் ரஹீம் (26) என்று தெரியவந்தது.
வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மூணாறைச் சேர்ந்த மாணவிகளிடம் காதலிப்பதாக பேசியுள்ளனர். போனில் காதல் வலையில் வீழ்ந்த மாணவிகளை மூணாறுக்கு வந்து அழைத்து செல்ல முடிவு செய்தனர்.
இதன்படியே பள்ளி முடிந்ததும், மாணவிகளை சொகுசு விடுதிகள் திட்டமிட்டு அழைத்து சென்றுள்ளனர். அவர்களிடம் ஆசைவார்த்தை கூறி தங்கும் விடுதியில் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் உடனடியாக பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்கள் உஷார் ஆனதால், போலீசுக்கு விஷயம் போயிருக்கிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இதேபோல் 2 மாணவிகளுக்கும் போலீசார் அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தார்கள்.
Weather Data Source: Wettervorhersage 21 tage