இம்முறை ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிப்பார் என்று நம்புகிறோம்! - சபாநாயகர் அப்பாவு

post-img
சென்னை: எதிர்வரும் 2025ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 6ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, இந்த முறை ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிப்பார் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கிறார். ஒரு சட்டமன்ற கூட்டத்தொடருக்கும், அடுத்த கூட்டத்திற்கும் 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி கூடாது என்பது விதி. அந்த வகையிலும், மக்களின் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கும் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2025ம் ஆண்டு முதல் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 6ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த அறிவிப்பை தலைமை செயலகத்தின் முதன்மை செயலாளர் சீனிவாசன் அறிக்கை வாயிலாக தெரிவித்திருக்கிறார். சட்டமன்ற கூட்டத்தொடர்: அதில், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 2025-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 6-ஆம் நாள், திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை-600 009, தலைமைச் செயலகம் சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அவ்வமயம், தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றுவது மரபு. ஆளுநர் என்ன பேச வேண்டும் என்பது குறித்து மாநில அரசு எழுதி கொடுக்கும். இது உரை நிகழ்த்துவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னரே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். இப்படி அனுப்பப்பட்ட உரையில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்படும். சபாநாயகர் அப்பாவு: இந்த மரபின் அடிப்படையில் ஜனவரி 6ம் தேதி நடக்கும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரையாற்ற இருக்கிறார். இது குறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, "கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிக்கவில்லை. முதல் பக்கத்தையும், கடைசி பக்கத்தையும் மட்டுமே படித்தார். இந்த முறை அவர் உரையை முழுமையாக வாசிப்பார் என்று நம்புகிறோம்" என தெரிவித்திருக்கிறார். அப்பாவுவின் கருத்து சட்டப்பேரவை குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. ஆளுநர் உரை வாசிப்பு: ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் தனது உரையை வாசிக்கும்போது சில வார்த்தைகளை தவிர்த்துவிடுகிறார். கடந்த முறை அப்பாவு குறிப்பிட்டதைபோல முதல் மற்றும் கடைசி பக்கத்தை மட்டுமே வாசித்திருந்தார். இதற்கான காரணமாக, ஆளுநர்-தமிழக அரசு மோதல் பார்க்கப்படுகிறது. திராவிட மாடல், திருக்குறள், காரல் மார்க்ஸ் என பல விஷயங்களில் தமிழக அரசின் கருத்துக்கு நேர் எதிரான கருத்துக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வைத்து வந்திருக்கிறார். குறிப்பாக பல்கலைக்கழகங்கள் விஷயத்தில் ஆளுநரின் நடவடிக்கைகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. 2023ம் ஆண்டும் வெடித்த பஞ்சயத்து: இந்த ஆண்டு மட்டுமல்லாது, 2023ம் ஆண்டும் கூட ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிக்கவில்லை. குறிப்பாக சில வார்த்தைகளை விட்டுவிட்டும், சில வார்த்தைகளை சேர்த்தும் அறிக்கையை வாசித்து முடித்திருந்தார். ஆளுநரின் பேச்சை அடுத்து எழுந்து பேச தொடங்கிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநரின் எழுத்துப்பூர்வமான உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம் பெறும் என்று தெரிவித்து தீர்மானத்த கொண்டு வந்தார். தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. அதன் பின்னர் ஆளுநர் அவையிலிருந்து அவசரமாக வெளியேறிவிட்டார். இப்படி இருக்கையில்தான் சபாநாயகர் அப்பாவு, இந்த ஆண்டு ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post