சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் சென்னை உள்பட வட தமிழக மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்ட நிலையில் வடகிழக்கு பருவமழை இயல்பை காட்டிலும் 34 சதவீதம் அதிகம் பெய்தது தான் காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு சென்னை உள்பட வெள்ளம் சூழ்ந்த மாவட்டங்களில் எவ்வளவு சதவீதம் அதிகம் பெய்துள்ளது என்பது பற்றிய டேட்டா வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் உள்ளது. இருப்பினும் கடந்த அக்டோபரில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தொடர்ந்து வெளுத்து வாங்கியது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை அவ்வப்போது கனமழை பெய்தது.
இந்த மாதம் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டது. கடந்த ஆண்டை ஒப்பிடும் அளவுக்கு அதிர்ஷ்டவசமாக வெள்ளம் ஏற்படவில்லை. இருப்பினும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அதன்பிறகு வடதமிழக மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டன. பெஞ்சல் புயலால் சென்னையை விட கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டன. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதிப்பட்டனர். தற்போது வெள்ளம் வடிந்துள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் நேற்று வரை (டிசம்பர் 21) வடகிழக்கு பருவமழை குறித்த டேட்டா வெளியாகி உள்ளது.
அதன்படி அக்டோபர் 1 முதல் டிசம்பர் 21 வரை சராசரியாக 42 செமீ மழை பெய்ய வேண்டும். ஆனால் நேற்று வரை 15 செமீ அதிகமாக 57 செமீ வரை மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட அதிகமாகும். அதாவது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 34 சதவீதம் வரை அதிகம்பெய்துள்ளது.
குறிப்பாக வடதமிழக உள்மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி உள்ளது. மாவட்ட வாரியாக பார்த்தால் திருப்பத்தூரில் 89 சதவீதம், கிருஷ்ணகிரியில் 80 சதவீதம், விழுப்புரத்தில் 70 சதவீதம் திருநெல்வேலியில் 64 சதவீதம், தர்மபுரி மற்றும் சேலத்தில் 60 சதவீதம், கோவையில் 53 சதவீதம், திருவண்ணாமலையில் 51 சதவீதம் வரை இயல்பை விட அதிக மழை பதிவாகி உள்ளது.
மேலும் தலைநகர் சென்னையை பொறுத்தவரை அக்டோபர் 1 முதல் நேற்று வரை இயல்பை விட மொத்தம் 33 சதவீதம் வரை மழை அதிகரித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் வழக்கமாக சென்னையில் 77 செமீ மழை பெய்ய வேண்டும். ஆனால் 102 செமீ மழை பெய்துள்ளது. அதாவது சென்னையில் நேற்று வரையிலான வடகிழக்கு பருவமழை என்பது இயல்பை விட 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இப்படியாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்தது தான் வெள்ளம் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.