மின்கோபுரத்தில் தொங்கிய உடல்.. திருச்சியில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் பலி

post-img
திருச்சி: திருச்சியில் உயர் மின்கோபுர பராமரிப்பு பணி செய்தபோது திடீரென்று மின்சாரம் பாய்ந்ததில் 2 ஒப்பந்த ஊழியர்கள் பலியாகினர். இதில் ஒருவரின் உடல் மின்கோபுரத்தில் தொங்கியது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் கலாமணி மற்றும் மாணிக்கம். இவர்கள் 2 பேரும் கேகே நகர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தனர். கேகேநகர் ஓலையூர் ரிங்க் ரோடு அருகே உயர் மின்கோபுரம் உள்ளது. இங்கு இன்று பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக கலாமணி மற்றும் மாணிக்கம் ஆகியோர் சென்றனர். பராமரிப்பு பணியின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகே கலாமணி, மாணிக்கம் ஆகியோர் பணியை தொடங்கி உள்னர். கலாமணி மின்கோபுரத்தின் மீது ஏறினார். மாணிக்கம் மின்கோபுரத்தில் கீழே நின்ற கலாமணிக்கு உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்கோபுரத்தின் வயரில் மின்சாரம் பாய்ந்தது. கண்இமைக்கும் நொடியில் மின்சாரம் கலாமணியின் உடலில் பாய்ந்தது. மேலும் தீப்பிழம்பு ஏற்பட்ட நிலையில் கலாமணி மின்கோபுரத்திலேயே இறந்தார். அவரது உடல் மின்கோபுரத்தில் தொங்கியது. அதேபோல் மின்கோபுரத்தின் கீழே நின்று கலாமணிக்கு உதவிய மாணிக்கம் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவரும் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடினார். இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரும் பலியானார். இதுபற்றி அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு வாகனத்தின் ஏணியை பயணித்து 40 அடி உயரத்தில் தொங்கிய கலாமணியின் உடலை கைப்பற்றினர். கலாமணி மற்றும் மாணிக்கம் ஆகியோரின் உடல்கள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவர்களின் உடல்களை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதில் மாணிக்கத்துக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் தான் ஆகிறது. மனைவி மற்றும் பெற்றோர்கள் உள்ளனர். குழந்தை இல்லை. இதற்கிடையே மின்சாரம் தாக்கி 2 ஒப்பந்த பணியாளர்கள் இறந்தாலும் கூட மின்வாரிய அதிகாரிகள் யாரும் செல்லவில்லை. அதோடு பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்பட்ட பிறகு தான் இருவரும் பராமரிப்பு பணியை தொடங்கிய நிலையில் எப்படி இருவரும் மின்சாரம் தாக்கி இறந்தனர்? என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Related Post