ரூ.20 தான் இந்த எண்ணெய்.. ஓடிபோய் முதல் வரிசையில் நின்ற வழுக்கை தலை இளைஞர்கள்.. பெரிய ட்விஸ்ட்

post-img
டெல்லி: வேலைக்கு உத்தரவாதம் இல்லை.. ஒன்றாம் தேதி வாங்கும் சம்பளம் 5ம் தேதியாக காலியாகிவிடுகிறது, தாங்க முடியாத அளவிற்கு பண கஷ்டமும், மன கஷ்டமும் பொருளாதார நெருக்கடியால் ஏற்படுகிறது.. இப்படி பல பிரச்சனைகளை இன்றைய இளைஞர்கள் எதிர்கொண்டாலும், வழுக்கை தலை பிரச்சனை அவர்களை பெரிதாக பாதித்துள்ளது. வழுக்கை தலையில் முடிவளரும் எனக்கூறி லட்சக்கணக்கில் பணம் சுருட்டியுள்ளார் நபர் ஒருவர். ஆனால் அவருக்கே தலை வழுக்கை என்பது தான் ஹைலைட். இன்றைய இளைஞர்கள் நரைமுடியை கலர் செய்து சரி செய்து கொள்கிறார்கள். கருப்பு டை அடைத்துமேக்கப் செய்து கொள்கிறார்கள். ஆனால் முடியே வளராமல் போனால் நொந்து போகிறார்கள். வழுக்கை தலையை சரி செய்ய என்ன செய்யவும் தயாராக இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றுவதற்கு பலர் தயாராகவே இருக்கிறார்கள். யூடியூபர்கள் சிலர், வழுக்கை தலையில் இதை அரைத்து தேய்த்தால் முடி வளரும் என்று சொன்னால் உடனே அதனை அரைத்துபூச பல லட்சம் பேர் தயாராக இருக்கிறார்கள். இதேபோல் மருத்துவ முகாம் நடத்தி இந்த எண்ணெய்யை தேய்த்து ஒரு வாரத்தில் முடி வளரும் என்று சொன்னால் முதல் வரிசையில் ஓடிப்போய் நிற்க, பல ஆயிரம் பேர் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள். இவர்களின் இந்த நம்பிக்கையை சாதகமாக்கி ஏமாற்றி பிழைப்பவர்கள் நாடு முழுவதும் அதிகமாக இருக்கிறார்கள். எப்படி தாம்பத்திய பிரச்சனைக்கு உடனடி தீர்வு என்று போர்டுகளை மாட்டிக்கொண்டு சில போலி நபர்கள் சுற்றுகிறார்களோ அதுபோல் வழுக்கை தலையில் முடி வளர்த்துவிடுவதாக நம்ப வைத்து லட்சங்களை கறப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். அப்படி ஒரு நூதன மோசடி உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் அரங்கேறியிருக்கிறது. வெறும் 20 ரூபாய்க்கு இந்த எண்ணைய்யை வாங்கி தேய்த்தால் முடி வளரும் என்று நம்ப வைத்துள்ளார்கள். ஏமாற்றம் அடைந்ததாலும் 20 ரூபாய் தானே என்று விட்டுவிடுவார்கள் என்பதால் இப்படி நூதன முறையில சல்மான் என்பவர் ஏமாற்றி உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் சல்மான் என்பவ ரூ.20 மதிப்புள்ள எண்ணெய் ஒன்றை தன்னிடம் வாங்கி தேய்த்தால் வழுக்கை தலையில் விரைவாக முடி வளரும் என்றும், ஒரு முறை அந்த எண்ணெயை தேய்த்துக் கொண்டாலே நல்ல பலன் உண்டு என்றும் செய்தித்தாளில் விளம்பரம் செய்தார். முகாம் நடைபெறும் முகவரியையும் அதில் கூறினார் இதை நம்பி நூற்றுக்கணக்கான வழுக்கைத்தலை இளைஞர்கள் அங்கு குவிந்தனர். அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு கூட்டம் வந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்த வாலிபர்கள் ஒவ்வொருவரிடமும் ரூ.20 பெற்றுக்கொண்டு அவர்களின் தலையில் சிறிய 'பிரஷ்' மூலம் எண்ணெயை தேய்த்து அனுப்பி வைத்துள்ளார் சல்மான். இதில்ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், சல்மானுக்கே முடியில்லை.. அவர் தலையே வழுக்கை தான். ஆனால் எந்த கேள்வியும் கேட்காமல் எண்ணெய்யை வாங்கி தேய்த்துள்ளனர். ஆனால் முடிவளரவில்லை.. மாறாக கடுமையான அரிப்பு மற்றும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட ஷதாப் என்பவர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சல்மான் மற்றும் அவரது கூட்டாளிகள் வழுக்கை தலையில் முடி வளரும் என பொய்யான வாக்குறுதி அளித்து பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது. இதற்கு முன்னர் டெல்லி, உத்தரகாண்ட், அரியானா ஆகிய மாநிலங்களிலும் இதேபோல போலி முகாம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சுருட்டியவர்கள் என்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து சல்மான் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை மீரட் போலீசார் கைது செய்தனர்.

Related Post