சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்று மாலை அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடமே தேர்தல் நடைமுறை விதிகள் அமுலுக்கு வந்துவிடும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் வேகம் பிடித்துள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையத்தில் காலியாக இருந்த 2 பணியிடங்களுக்கான ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 3 மணிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஒரு பக்கம் அமலாக்கத்துறை சோதனை, மற்றொரு பக்கம் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை என எதற்கும் பஞ்சம் இல்லாமல் மாறியுள்ளது நாட்டின் அரசியல் களம்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அமைதியாகத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய பொறுப்பு தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.
இந்தியாவில் தேர்தல் ஆணையம் என்று ஒன்று உள்ளது. அது தன்னிச்சையான அதிகாரம் கொண்ட அமைப்பு எனப் பாமர மக்களுக்கும் புரியவைத்தவர் டி.என். சேஷன். அவரது பதவிக் காலத்தில் தான் போஸ்டர் ஒட்டுவதில் தொடங்கி, பரப்புரை நேரத்தை ஒழுங்குபடுத்தியது வரை வேகம் காட்டியது தேர்தல் ஆணையம்.
அவரைப்போலவே தனது பதவிக் காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டவர் மறைந்த முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி. அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து சில விளக்கங்களை அளித்துள்ளார்.
இன்று மாலை 3 மணிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகள் எப்போது நடைமுறைக்கு வரும்? கட்சிகளுக்கு என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்? வழக்கமான நடைமுறைகள் என்ன? என்பது பற்றிய பல கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
"இன்று மாலை தேர்தல் தேதி அறிவித்தவுடன் அனைத்து தேர்தல் விதிமுறைகளும் உடனே அமலுக்கு வந்துவிடும். அதை ஆங்கிலத்தில் Model Code of Conduct எனச் சொல்வார்கள்.
பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சிகள் தங்களின் கீழ் உள்ள அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்துவதற்காக வாய்ப்புகள் உள்ளன என்பதனால், அதற்காக சில சட்டவிதிமுறைகள் அமுலுக்கு வரும். அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது.
அதே மாதிரி வேறு மாவட்டங்களுக்கு அலுவலக ரீதியாகக் கட்டளைப் பிறப்பிக்க முடியாது போன்ற பொதுவான நிறைய விதிமுறைகளைத் தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.
மத வெறுப்புகளைத் தூண்டும்படி பரப்புரையின் போது பேசக் கூடாது. அதேபோல் ஒருவரை இழிவுபடுத்தும் வகையில் பேசக் கூடாது. தனிப்பட்ட முறையில் ஒருவரைத் தாக்கக் கூடாது. மற்ற கட்சி வேட்பாளர்கள் பற்றி அவதூறான செய்திகளைப் பரப்பக் கூடாது.
தவறான செய்தியைப் பரப்பக் கூடாது எனச் சொல்லும் போது அது இன்றைக்கு ஊடகங்கள் மூலமும் நடக்கின்றன. அதன் மூலமும் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆகவே அதையும் கண்காணிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.
அப்படியான பொய்ச் செய்திகள் பரப்பப்படும் போது மாவட்ட, அல்லது மாநில அளவிலான தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்கு அதைக் கொண்டு வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சட்டம் வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அதைப்போன்று குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் கொண்டு போகும்போது அதற்கான உரிய ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும். அது சட்டப்படி முறையான பணம் என்பதற்காக ஆவணங்கள் கட்டாயம் தேவை.
அப்படி முறையான ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்படும். பின்னர் உரிய ஆவணங்களைக் காட்டி பெற்றுக்கொள்ளலாம். ஆவணங்களைச் சமர்ப்பிக்காத போது, அது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்படும்.
அதைப்போன்றுதான் தங்க நகைகள், வீட்டு உபயோக பொருட்களான மிக்சி, கிரைண்டர், ஃபேன் போன்ற பொருள்களை மொத்தமாகக் கொண்டு செல்லும் போது அதற்கான விற்பனை ஆவணங்கள் அல்லது வாங்கியதற்கான ரசீது ஆகியவை அவசியம்.
தனிப்பட்ட முறையில் கொண்டு செல்லும் ஒன்று, இரண்டு பொருட்களுக்கு இது தேவை இல்லை. மொத்தமாகக் கொண்டு செல்லும் போது அவசியம் ஆவணங்கள் தேவை. இல்லை எனில் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல் செய்யப்படும்.
ஒரு அதிகாரி மீது ஏதேனும் புகார்கள் வந்தால் அது குறித்து உடனடியாக தலைமைத் தேர்தல் அதிகாரி விசாரணை நடத்துவார். புகார் உண்மை என்பது நிரூபிக்கப்பட்டால், அந்த அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்படுவார்" எனப் பல விளக்கங்களை அளித்துள்ளார் கோபால்சாமி.