கோவையில் பங்களா வாங்கியிருக்கேனா? போங்கண்ணா! நானே மாமனார் வீட்டிலதான் தங்குறேன்! அண்ணாமலை மறுப்பு

post-img

கோவை: கோவையில் நான் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்களாவை வாங்கியிருப்பதாக வெளியான தகவலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறுத்துள்ளார். கோவையில் பங்களா வாங்கும் அளவுக்கு என் நிதிநிலைமை இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் கோவைக்கு வரும் போதெல்லாம் நான் மாமனார் வீட்டிலேயே தங்கி வருகிறேன் என்றும் என்னை காண வரும் தொண்டர்கள் இடவசதியின்றி வெளியே நிற்கும் நிலை உள்ளது என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது இவற்றை தெரிவித்திருந்தார். அவர் மேலும் கூறியிருப்பாவது: விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் அர்பன் நக்சலான ஆனந்த் டெல்டும்டே ஏன் கலந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் நக்சல் அரசியல் ஊடுருவலை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மணிப்பூர் கலவரம் குறித்து பேசிய போது அதற்கு காரணமாக அடிப்படை தகவல்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் வடகிழக்கு மாநிலங்களில் மக்களுக்கு எதிரான சிறப்பு ஆயுத சட்டங்கள் பெருமளவு நீக்கப்பட்டுள்ளது.
லாட்டரி அதிபரின் மருமகனான ஆதவ் அர்ஜுனா திமுகவை மன்னராட்சி என விமர்சித்தார். அவரது மாமனார்தான் தேர்தல் பத்திரங்களின் மூலம் திமுகவுக்கு 581 கோடியை வழங்கியுள்ளார். விசிக திருமாவளவன் கட்டுப்பாட்டில் இல்லை. லாட்டரி அதிபரின் மருமகன் கையில்தான் உள்ளது என்பது அம்பேத்கர் நிகழ்வில் அவர் பேசியதே காட்டுகிறது.

அம்பேத்கரை வைத்து அரசியல் வியாபாரம் செய்வதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். விஜய் உள்பட எந்த அரசியல்வாதிகள் மணிப்பூர் செல்ல நினைத்தாலும் அவர்களோடு நானும் சென்று அங்குள்ள நிலையை விளக்க தயாராக உள்ளேன். மணிப்பூர் விவகாரம் குறித்து அடிப்படை விஷயங்களை விஜய் தெரிந்து கொள்ள வேண்டும். மணிப்பூர் விவகாரத்தில் ஜனநாயக முறையில் பேசி தீர்வு காணப்பட வேண்டும்.
சிந்தாதிரிப்பேட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் பேசி வைத்த காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து நாளை தமிழக டிஜிபியை சந்தித்து பாஜ சார்பில் மனு அளிக்க போகிறோம் என தெரிவித்திருந்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பனையூரில் வசித்து வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு அண்ணாமலை கட்டியிருந்த காஸ்ட்லி ரபேல் வாட்ச் குறித்த சர்ச்சை எழுந்தது. அப்போது என்னிடம் சொந்தமாக 4 ஆடுகள் மட்டுமே இருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதுகுறித்து அப்போது செந்தில் பாலாஜி பேசுகைகியில் 4 ஆடு மேய்த்தாலே மூன்றே முக்கால் லட்சம் வீட்டு வாடகை தரமுடியுமா என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில்தான் தனது வீட்டுக்கான வாடகையை நண்பர்கள் செலுத்துவதாகவும் காருக்கு பெட்ரோலை பாஜக போட்டுவிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

Related Post