பட்டா, சிட்டா ஸ்பெஷலே இதுதான்.. கிராம நத்தம் நில ஆவணத்தை டவுன்லோடு செய்யலாமா? இவை அரசின் இணையதளங்கள்

post-img

சென்னை: பட்டா, சிட்டா என்றால் என்ன? இதன் அவசியங்கள் என்னென்ன? பட்டா, சிட்டாவில் பெயர் மாற்றம் செய்ய முடியுமா? பட்டா, சிட்டாவை டவுன்லோடு செய்ய முடியுமா? நிலம் தொடர்பான சேவைகளை பெற உதவும் அரசின் இணையதளங்கள் என்னென்ன? அவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
ஒருவர் தன்னுடைய சொத்து மீதான உரிமையை சட்டரீதியாக நிரூபிக்கும் ஆவணத்தைதான் பட்டா என்பார்கள்.. நிலத்துக்காக வருவாய்த் துறை வழங்கும் பதிவு ஆவணம்தான் இந்த பட்டா.

ஒருவர் வாங்கிய நிலத்துக்கு அதிகாரப்பூர்வமாகவும், சட்டப்பூர்வமாகவும் உரிமையை காட்டும் ஆவணம் இதுவாகும். அரசாங்கம் வழங்கும் இந்த ஆவணத்தில், பட்டா எண், மாவட்டம், வட்டம், கிராமம், மற்றும் ஓனரின் பெயர், சர்வே நம்பர், உட்பிரிவு, நன்செய் நிலம் / புன்செய் நிலம், நிலம் அமைந்துள்ள பகுதி, தீர்வை விவரங்கள் இப்படி அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
பட்டா, சிட்டா: பட்டாவின் ஒரு பகுதிதான் சிட்டா என்பார்கள்.. சிட்டா என்பது, ஒருவருடைய சொத்து எந்த பகுதியில் அமைந்துள்ளது? அதன் அளவுகள் என்னென்ன? அந்த நிலத்துக்கு யார் ஓனர்? அந்த நிலம் நஞ்சையா? புஞ்சையா? வறண்ட நிலமா? ஈர நிலமா? போன்றவை அடங்கிய ஆவணமாகும்.. வருவாய்த்துறை மூலம் தரப்படும் இந்த ஆவணத்தை நில உரிமையாளர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
பட்டா சிட்டா பெயர்களை திடீரென மாற்றம் செய்ய வேண்டி வரலாம்.. ஆனால், இதற்கு ஆன்லைனில் வழிவகை இல்லை.. எனவே, அந்தந்த பகுதியில் உள்ள தாலுகா அல்லது கிராம நிர்வாக அலுவலகத்தை அணுக வேண்டும். அங்குள்ள பட்டா பரிமாற்ற படிவத்தில், தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, கையொப்பமிட்ட விண்ணப்பத்தை அலுவலகத்தில் சமர்ப்பித்தால், 15 முதல் 30 நாட்களுக்குள் புதிய பட்டாக்கள் வழங்கப்பட்டுவிடும்.

இணையவழி சேவைகள்: அதேபோல, நிலம் தொடர்பான சேவைகளை பெறுவதற்காக, தமிழக அரசு பல்வேறு இணையதளங்களை செயல்படுத்தி வருகிறது.. குறிப்பாக, கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள வேண்டுமானால், https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தை அணுகலாம், இதில், தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் விண்ணப்பம் செய்து பலனடையலாம்.
அதேபோல், நில உரிமைதாரர்கள் தங்களது புல எல்லைகளை அளந்து பார்க்க வேண்டுமானாலும் அல்லது புல எல்லைகளை அளந்து காட்ட கோருவதற்கும் https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கிராம நத்தம்: கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா, "அ" பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றையும், நகர்ப்புற நிலஅளவைப் பதிவேட்டின் நகல், நகர நிலஅளவை வரைபடம் மற்றும் புல எல்லை வரைபடம் / அறிக்கை போன்றவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ள, https://eservices.tn.gov.in என்ற இணையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் பட்டா மாற்றத்துக்கு அளித்த விண்ணப்பத்தின் நிலையையும் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம்.

கிராம வரைபடங்கள் மற்றும் பழைய நிலஅளவை எண்களுக்கான புதிய நில அளவை எண்களின் ஒப்புமை விளக்கப்பட்டியல் போன்றவற்றை https://tnlandsurvey.tn.gov.in என்ற வெப்சைட்டிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Related Post