சென்னை: விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் பொன்முடி சென்ற போது, அவர் மீது சேறு வீசப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பாஜக பெண் பிரமுகர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலினால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்னாமலை உள்ளிட மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இந்த மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்கள் நீரில் மிதந்தன. ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள், பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தை வெளியேற்றும் பணி கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதற்காக பல்வேறு வெளிமாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் என 1,500 பேர் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள், மாவட்டத்தின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளை சூழ்ந்த வெள்ளத்தை ராட்சத மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, நேற்று முன் தினம் வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இருவேல்பட்டு பகுதியில் ஆய்வு செய்ய அமைச்சர் பொன்முடி சென்றார். அவரது மகனும், கள்ளக்குறிச்சி முன்னாள் எம்பியுமான கவுதம சிகாமணி, விழுப்புரம் கலெக்டர் பழனி உள்ளிட்டோரும் அங்குச் சென்று இருந்தனர்.
அப்போது அங்கு போராட்டத்தில் நடைபெற்று கொண்டு இருந்தது. ஆத்திரம் அடைந்த யாரோ சிலர் அருகில் கிடந்த சேற்றை வாரி அமைச்சர் பொன்முடி மீது வீசினர். இதில் அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி, கலெக்டர் பழனி ஆகியோரது சட்டைகளின் மீது சேறு பட்டது. உடனே அங்கிருந்த போலீசார் பலத்த பாதுகாப்புடன் அமைச்சரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அமைச்சர் மீது சேறு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பொன்முடி மீது சேறு பூசப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக பெண் பிரமுகர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமர் என்ற ராமகிருஷ்ணன், பாஜக பெண் பிரமுகர் விஜயராணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக இந்த சேறு வீசப்பட்ட சம்பவம் குறித்து விளக்கம் அளித்திருந்த அமைச்சர் பொன்முடி, "என் மீது சேற்றை வீசியவர்கள் யார் என்று எல்லாருக்கும் தெரியும். வேண்டும் என்றே என் மீது சேறு வீசப்ட்டது. நான் காரில் இருந்து இறங்கவில்லை என்றும் அதனால் தான் என் மீது சேறு வீசப்பட்டது என்றும் கூட கூறினார்கள். ஆனால் நான் அரைமணி நேரமாக அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்துவிட்டு தான் வந்தேன். அப்போது தான் என் மீது சேற்றை வீசினர்" என்று கூறியிருந்தார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage