தருமபுரி: நெல்லை, கோவை, சேலம், கிருஷ்ணகிரியை தொடர்ந்து சீமானுக்கு அதிர்ச்சி தரும் விதமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து தர்மபுரி மாவட்ட முக்கிய பொறுப்பார்கள் விலகியுள்ளனர். சீமான் தமிழ்த் தேசியம் என்ற பெயரில் மாற்று மொழியினரை கொச்சை படுத்துவதாகவும், சீமான் கொள்கை கோட்பாடு என்பதை எல்லாம் கடைபிடிக்கவில்லை என்று குற்றச்சாட்டியுள்ளதோடு, கூண்டோடு விலகுவதற்கு கூட கட்சியில் கூட்டம் இல்லையென கூறியுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சியில் புயல் வீசி வருகிறது. மேலும் காளியம்மாள், நத்தம் சிவசங்கரன் ஆகியோர் குறித்து சீமான் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரங்கள் அக்கட்சியில் புயலை கிளப்பியுள்ளது.
இதனையடுத்து அணி அணியாக கட்சியை விட்டு கிளம்பி வருகின்றனர் தம்பிகள். அந்த வகையில், சீமான் மீது அதிருப்தியில் இருந்த கிருஷ்ணகிரி பிரபாகரன், விழுப்புரம் வடக்கு சுகுமார், விழுப்புரம் மேற்கு பூபாலன், விழுப்புரம் மத்திய மணிகண்டன், மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி, திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் வெளியேறினர்.
மேலும், திருச்சி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம், நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி அமைப்பின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் நகர துணை தலைவர் பொறுப்பிலிருந்து ஜீவானந்தம் ஆகியோர் விலகினர். தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், நெல்லை மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் கண்ணன், இளைஞர் பாசறை நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் பார்வின், குருதி கொடை பாசறை மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோனி விஜய் உட்பட 30 நிர்வாகிகள் கூண்டோடு விலகினர்.
இந்நிலையில்,நெல்லை, கோவை, சேலம், கிருஷ்ணகிரியை தொடர்ந்து சீமானுக்கு அதிர்ச்சி தரும் விதமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து தர்மபுரி மாவட்ட முக்கிய பொறுப்பாளர்கள் விலகியுள்ளனர். அரூர் சட்டமன்ற தொகுதி தலைவர் இளையராஜா, பொருளாளர் சுரேஷ், அரூர் ஒன்றிய பொறுப்பாளர் சிவா, அரூர் தொகுதி துணை செயலாளர் வேடியப்பன், ஒன்றிய பொருளாளர் நிவாஸ், கிளை பொறுப்பாளர் அரவிந்தன், ஒன்றிய பொறுப்பாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் சிவமூர்த்தி, தொகுதி இணைச்செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் பசுபதி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி பொருளாளர் ஜெயக்குமார், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் கலைச்செல்வி, கோகிலா உள்ளிட்ட பலர் விலகி உள்ளனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள இளையராஜா, நாம் தமிழர் கட்சியில் நீண்ட ஆண்டுகளாக பயணம் செய்து வந்த நிலையில் கனத்த இதயத்துடன் கட்சியில் இருந்து விலகுகிறோம். கூண்டோடு விலகல் என்ற தலைப்பை நீங்கள் போட வேண்டாம். எனில் அந்த அளவுக்கு நாம் தமிழர் கட்சியில் கூண்டே இல்லை. தொடர்ந்து தமிழ் தேசியம் என்ற பெயரில் ஆண்ட, ஆளுகின்ற, ஆளப்போகின்ற தலைவர்களை சீமான் மிகவும் கொச்சையாக பேசி உள்ளார்.
சாதிகள் இல்லை என பேசிவிட்டு குறிப்பிட்ட சாதிகள் குறித்து அவதூறாக சீமான பேசுகிறார். மேலும் தங்கள் கொள்கையிலிருந்து அவர் விலகி விட்டது கண்கூடாக தெரிகிறது. இடைத்தேர்தல் தொடங்கி பல இடங்களில் மாற்று மொழியினர் குறித்தும் அவதூறாக பேசி வருகிறார். கட்சியை மறுக்கட்டமைப்பு செய்ய நாங்கள் முயற்சித்தாலும் அதற்கு பலனளிக்கவில்லை. இனிமேலும் கட்சியில் தொடர்ந்தால் கட்சிக்கும் எங்களுக்கும் நல்லது இல்லை என்பதால் கட்சியில் இருந்து விலகுகிறோம்” எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே பல மாவட்டங்களில் இருந்து நாம் தமிழர் கட்சியினர் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில் புது வரவாக தர்மபுரியும் அந்த பட்டியலில் இணைந்திருக்கிறது. வரும் காலங்களில் மேலும் பல கட்சி தாவல் நடவடிக்கைகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.