எம்ஜிஆருக்கு பதில் கருணாநிதியா? லேபிள் ஒட்டும் வேலை செய்யும் திமுக! வார்னிங் கொடுக்கும் சீனிவாசன்!

post-img
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பெயரை மாற்றி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் வைப்பதற்கு திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் எதிர்ப்பை மீறி பெயரை மாற்றினார் போராட்டம் முன்னெடுக்கப்படுமென அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எச்சரித்துள்ளார். திண்டுக்கல் மாநகராட்சி இயல்பு மாமன்ற கூட்டம், கூட்ட அரங்கில் மேயர் இளமதி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆணையாளர் ரவிச்சந்திரன் துணை மேயர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ள உள்ள திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கூட்டம் நிறைவடையும் தருணத்தில் திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் பெயரினை வைக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள், கூட்ட அரங்கில் கூட்டரங்கிற்கு ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பெயரை மாற்றம் செய்யக்கூடாது என கண்டித்து கோஷங்களை மாமன்ற கூட்டு அரங்கில் எழுப்பியவாறு மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன் தலைமையில் கூட்ட அரங்கினை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் எதிர்ப்பை மீறி பெயரை மாற்றினார் போராட்டம் முன்னெடுக்கப்படுமென அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு லேபிள் ஒட்டும் பணியைத் தான் செய்து வருகின்றது. புதியதாக எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. இதனை பலமுறை கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் சட்டமன்றத்திலும் பல பொது கூட்டங்களிலும் கண்டனம் தெரிவித்து பேசி உள்ளார். தற்போது இதன் வரிசையில் திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு பாரத ரத்னா எம்ஜிஆர் மன்றம் என்ற பெயர் இருந்ததை அகற்ற திமுகவைச் சேர்ந்த மாநகராட்சி மேயர், துணை மேயர், திமுக மாமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர் என்பது கண்டனத்துக்குரியதாகும். திண்டுக்கல் மாநகரம் நகராட்சியாக செயல்பட்டு வந்த பொழுது. இதனை மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தார். இதனையடுத்து கடந்த 26-07-2013 ம் தேதி நடைபெற்ற மாமன்ற கூடத்தில் திண்டுக்கல் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நகர்மன்ற கூட்ட அரங்கு ரூ.39.00 இலட்சத்தில் மேம்படுத்தப்பட்டு அந்த கூட்ட அரங்கிற்கு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் பாரதரத்னா டாக்டர். எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவாக பாரதரத்னா எம்.ஜி.ஆர். நகர்மன்ற கூடம் என்ற திருப்பெயர் வைக்கப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் மாதம் 17ஆம் தேதி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் விவாதம் முடிந்தவுடன் நிறைவாக அவசர அவசரமாக பாரத ரத்னா எம்ஜிஆர் நகர்மன்ற கூடம் என்ற பெயரை அகற்றிவிட்டு டாக்டர் கலைஞர் அரங்கு என பெயர் வைக்கப் போவதாக துணை மேயர் ராஜப்பா கூறியது கேலிக்கூத்தாகும். ஏற்கனவே மாமன்ற கூட்டத்திற்கு பாரத ரத்னா எம்ஜிஆர் நகர் மன்ற கூடம் என பெயர் வைத்து அதனை நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி ஒப்புதலும் பெறப்பட்ட உள்ள சூழ்நிலையில் பாரத ரத்னா எம்ஜிஆர் நகர்மன்ற கூடம் என்ற பெயரை அகற்ற முயற்சிப்பது அறிவீனத்தனமாகும். அரசு ஒப்புதலுடன் (கெஜட் நோட்டிபிகேஷன்) வெளியிடப்பட்டுள்ள பெயரை திமுக மாநகராட்சி நிர்வாகம் எப்படி பெயர் மாற்ற முடியும்? இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். அதோடு கூட்டத்தில் கடைசியாக கொண்டு வந்த இந்த சிறப்பு தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் கழகத்தின் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

Related Post