திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்போருக்கு பெரியாரின் கைத்தடியே பதிலளிக்கும்! ஸ்டாலின் பேச்சு

post-img
சென்னை: இன்று எழும்பூரில் உள்ள பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்போருக்கு பெரியாரின் கைத்தடியே பதிலளிக்கும் என்று பேசினார். பெரியாரின் நினைவு நாளான இன்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அங்கு பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், திராவிட மாடல் என்றால் என்ன எனக் கேட்போருக்குப் பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும் என்று குறிப்பிட்டார். மேலும், பெரியார் நினைவிடத்திற்கு வந்ததைத் தாய் வீட்டிற்கு வந்ததை போல் உணர்கிறேன் என்றும் பெரியாரின் தொண்டராக கி.வீரமணியை வாழ்த்துகிறேன் என்றும் அவர் தெரிவித்தார். பெரியாரின் 51 ஆவது நினைவு நாளில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்து கொண்டு இருப்போருக்கு இந்த கைத்தடி ஒன்றே போதும். நான் இப்போது தாய் வீட்டிற்கு வந்து இருக்கிறேன். தாய் வீட்டுக்கு வரும் போதெல்லாம் எனக்கு உணர்ச்சி எழுச்சி ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட தமிழ் இனம், ஒற்றுமை பெறவும் சுயமரியாதை உணர்வு பெற்று, மேல் எழுந்து நிற்கவும் தன் வாழ்நாள் முழுக்க பாடுபட்டு, பல தியாகங்களைச் செய்து, நமது இனத்திற்காக உழைத்தவர் ஈரோட்டுச் சிங்கம் பெரியார். பெரியாரின் தியாகத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்த டிஜிட்டல் நூலகம் மற்றும் ஆய்வு மையம் அமைகிறது. பெரியார் தனது பயணத்தை முடித்துக் கொண்டார், நாம் தொடர்வோம் என்று கருணாநிதி சொன்னார். தந்தை பெரியாரின் தொண்டர்களான நாம் அதைச் செய்துள்ளோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

Related Post