ஹைதராபாத்: புஷ்பா 2 சிறப்புக் காட்சியின்போது பெண் பலியான விவகாரம் பெரியளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், தனது ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார் அல்லு அர்ஜுன்.
'புஷ்பா 2' திரைப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸானது. தெலங்கானாவில் ரசிகர்களுக்காக டிசம்பர் 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு சிறப்புக் காட்சி ஒளிபரப்பப்பட்டது. அதைப் பார்க்க அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு படம் பார்க்க ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு வந்தார். இதனால் அங்கு அல்லு அர்ஜுனை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் குவிந்து கடும் நெரிசல் ஏற்பட்டது.
ரேவதி என்கிற இளம்பெண், படம் பார்க்க சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். மேலும், அவரது மகன் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து தெலுங்கானா சட்டப்பேரவையில், அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
சம்பவம் நடந்த சந்தியா தியேட்டர் உள்ள பகுதி நிறைய ஹோட்டல்கள், தியேட்டர்கள் இருக்கும் பகுதி என்பதால், பாதுகாப்பு கருதி அங்கு வரவேண்டாம் என போலீசார் கூறியதை மதிக்காமல் அல்லு அர்ஜுன் அங்கு சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம். தியேட்டருக்கு வெளியே ஒருவர் உயிரிழந்துவிட்டார். கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் உள்ளது என போலீசார் தெரிவித்த பிறகும், படத்தை முழுவதுமாக பார்த்த பிறகுதான் புறப்படுவேன் என அல்லு அர்ஜுன் கூறியுள்ளார்.
காவல் துணை ஆணையர், நீங்கள் புறப்படாவிட்டால் கைது செய்வோம் எனக் கூறி வலுக்கட்டாயமாக அழைத்த பிறகுதான் அவர் புறப்பட்டார். அப்போதும் வெளியே சென்று காரின் மேற்கூரையை திறந்து ரோடு ஷோ நடத்துகிறார். என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள்? எனக் காட்டமாகப் பேசினார் ரேவந்த் ரெட்டி.
அல்லு அர்ஜுன் ஒரு நாள் சிறையில் இருந்ததற்கு, திரையுலகினர் அனைவரும் அவரைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றனர். சிறையில் இருந்ததால் கால் போச்சா, கண் போச்சா, கை போச்சா, கிட்னி போச்சா என்ன ஆச்சு? ஒன்றும் ஆகவில்லை. ஆனால், அவர் வீட்டிற்கு சென்ற பிறகும் அவரை பார்க்க வரிசையில் பலர் நிற்கின்றனர். ஆனால், இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனை யாரும் சென்று பார்க்கவில்லை என கோபமாகப் பேசினார் ரேவந்த் ரெட்டி.
பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அல்லு அர்ஜுன், "தியேட்டரில் நடந்த நெரிசல் என்பது ஒரு விபத்து. இதில் யாருடைய தவறும் அல்ல. தியேட்டர் உரிமையாளர் வரும் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முயற்சித்ததும், நான் ஒரு நல்ல படத்தை வெளியிட முயற்சித்ததும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலானது. இது ஒரு விபத்து. இது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. நிஜமாகவே அந்த குடும்பத்துக்கு நடந்தது மிக மிக துரதிருஷ்டம்.
என்னுடைய வாழ்க்கை லட்சியமே, தியேட்டருக்கு வரும் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பது தான். தியேட்டருக்கு வரும் அனைவரையும் சந்தோஷப்படுத்தி அனுப்பவேண்டும் என்பதே என் நோக்கம். என்னைப் பற்றிய தவறான தகவல்கள், தவறான குற்றச்சாட்டுகள் பரவுகின்றன. நான் எந்தத் துறையையும் எந்த அரசியல் தலைவரையும் குற்றம்சாட்டவில்லை. நாங்கள் மாநில அரசின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி தான் அடைந்திருக்கிறோம். சிறப்புக்காட்சிக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் என மகிழ்கிறோம். ஆனால், இவர் இப்படிப்பட்டவர் என தவறான குற்றச்சாட்டுகளை சொல்வது என்னை அவமானப்படுத்துகிறது" என உருக்கமாகப் பேசினார்.
இதைத்தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். ரேவந்த் ரெட்டியை விமர்சித்தும் பலர் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், அல்லு அர்ஜுன் அவரது ரசிகர்களுக்கு வேண்டுக்கோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அதில், ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் எந்த விதமான தவறான மொழி அல்லது நடத்தையை கையாள வேண்டாம். எப்போதும் போல் தங்கள் உணர்வுகளை பொறுப்புடன் வெளிப்படுத்துமாறு எனது ரசிகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். என் ரசிகர்கள் என ஃபேக் ஐடிகள் மூலம் தவறாக சித்தரித்து, தவறாகப் பதிவிடும் செயல்களில் யாராவது ஈடுபட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ரசிகர்கள் இதுபோன்ற பதிவுகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.