ரியாத்: இந்தியாவை சேர்ந்த 35 வயது இளைஞர் போதைப்பொருள் கடத்திய வழக்கில் தூக்கு தண்டனை விதித்து சவூதி அரேபியா நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள ராசாட்டி கிராமத்தை சேர்ந்தவர் முகமது ஜெய்த் (வயது 36). இவர் சவூதி அரேபியாவில் டிரைவர் வேலைக்கு சென்றார். அங்கு அவர் போலீஸ் அதிகாரி வீட்டில் டிரைவராக பணி செய்து வந்துள்ளார்.கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முகமது ஜெய்த் கார் ஓட்டி சென்றார்.
அப்போது அவரது காரில் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. காரில் இருந்து 700 கிராம் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முகமது ஜெய்த்தை சவூதி அரேபியாவின் மெக்கா போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர் ஜெத்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 2023 ஜனவரி மாதம் 15ம் தேதி முதல் முகமது ஜெய்த் அந்த சிறையில் உள்ளார். இதுதொடர்பான வழக்கு மெக்காவில் உள்ள கிரிமினல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முகமது ஜெய்த்துக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி கிதாபூர் சர்க்கிள் போலீஸ் ஆபிசர் பிரமோத் குமார் சிங் கூறுகையில், ‛‛போலீசார் முகமது ஜெய்த்தின் குடும்பத்தினரை சந்தித்துள்ளனர். அந்த குடும்பத்துக்கு சவூதி அரேபியாவில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது'' என்பதை உறுதி செய்தார். மீரட் எஸ்பி கூறுகையில்,''மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து சவுதி அரசு கடிதம் எழுதியுள்ளது. இது குறித்த நோட்டீஸ் ஜூனைத்தின் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது'' என்றார்
ஜூனைத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தியை கேள்விப்பட்டதும் அவருடைய மனைவி,தாய், தந்தை ஆகியோர் கடும் சோகமடைந்தனர். மரண தண்டனையில் இருந்து ஜூனைத்தை காப்பாற்றுவதற்கு கருணை மனு சவுதி அரசாங்கத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி முகமது ஜெய்த்தின் தம்பி முகமது சாத் கூறுகையில், ‛‛எனது அண்ணன் டிரைவர் பணிக்காக கடந்த 2018 ம் ஆண்டு சவூதி அரேபியா சென்றார். அங்குள்ள நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றினார்.அப்போது அவர் விபத்தில் சிக்கினார். அதன்பிறகு அவர் அங்குள்ள போலீஸ்காரரிடம் டிரைவராக பணியாற்றினார். உணவு மற்றும் தினசரி செலவுக்காக அவர் போலீஸ்காரரிடம் பணிசெய்துள்ளார். என் அண்ணன் மீது தவறான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை இந்தியா மீட்டு கொண்டு வர வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage