சிரியா ஆட்சி கவிழ்ப்பால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு.. காஷ்மீர் விவகாரத்தில் ஆசாத் நிலைப்பாடு என்ன?

post-img

டமாஸ்கஸ்: சிரியாவில் இப்போது மிகப் பெரிய உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஹெச்.டி.எஸ் பிரிவினர் சிரியாவை கைப்பற்றியுள்ளனர். இதன் காரணமாக சிரியா அதிபராக இருந்த ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு இது என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மத்திய கிழக்கில் இப்போது அடுத்தடுத்து பதற்றம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல், ஈரான் மோதல் ஒரு பக்கம் இருக்க சிரியாவிலும் உள்நாட்டுப் போர் வெடித்தது. அங்கு அதிபராக இருந்த பஷர் அல்-ஆசாத் ஆட்சி வீழ்ந்தது.
பஷர் அல் ஆசாத்தின் வீழ்ச்சி, மத்திய கிழக்கு பகுதியைத் தாண்டி எதிரொலிக்கும். குறிப்பாக இந்தியாவை இது பல வழிகளில் பாதிக்கும். ஏனென்றால் பல காலமாகவே இந்தியாவும் சிரியாவும் நட்பு நாடாகவே இருந்து வருகிறது. ஆசாத்தின் வீழ்ச்சியால் இந்தியாவுக்கு என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும் என்பதை நாம் 5 பாயிண்டுகளாக பார்க்கலாம்.
நட்பு நாடு: அதிபர் பஷர் அல் ஆசாத் இருந்த வரை சிரியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்தது. கடந்த 2011ம் ஆண்டு ஆசாத் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டுப் போர் வெடித்த போதிலும் இந்தியா அவருக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளது. குறிப்பாக ஐக்கிய அமீரகம், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகள் சிரியாவுடன் நல்லுறவை ஏற்படுத்திய பிறகு, இந்தியா- சிரியா உறவு மேலும் மேம்பட்டது.
ஏன் முக்கியம்: சிரியா உள்ளிட்ட மற்ற இஸ்லாமிய நாடுகள் உடனான உறவு இந்தியாவுக்கு முக்கியமானதாக இருந்தது. ஏனென்றால் பாகிஸ்தான் இந்தியா குறித்த தவறான தகவல்களைப் பரப்ப அதற்குப் பதிலடி தர இந்த நாடுகள் உடனான நல்லுறவு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் கூட உள்துறை இணை அமைச்சர் முரளீதரன் சிரியா சென்று திரும்பியிருந்தார். சிரியாவில் உள்நாட்டுப் போர் நடக்கும் நிலையில், இந்தியா அதில் நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது.
காஷ்மீர் விவகாரம்: சிரியாவும் இந்தியாவுக்கு எப்போதும் ஆதரவாகவே இருந்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில், இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள நாடான சிரியா இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் (OIC) உள்ள பல நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் பாக். ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும், சிரியா எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது.
காஷ்மீர் என்பது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்று சிரியா பல முறை தெளிவாகக் கூறியிருக்கிறது. சிரியாவில் ஆசாத் ஆட்சி கவிழ்ந்து புதிய ஆட்சி அமையும் நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் அவர்கள் நிலைப்பாடும் கூட மாறாது என்றே தெரிகிறது.
இந்தியா உதவிகள்: சிரியாவில் இக்கட்டான சூழல்கள் ஏற்படும் போதெல்லாம் இந்தியா அவர்களுக்கு உதவியுள்ளது. உள் துறை இணை அமைச்சர் முரளீதரன் அங்குச் சென்ற போது கூட, இந்தியா வந்து படிக்கும் சிரியா மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் என்று அமைச்சர் முரளீதரன் அறிவித்து இருந்தார். அதேபோல கடந்த 2023 பிப். மாதம் சிரியாவில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அப்போதும் கூட இந்தியா பல உதவிகளைச் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதலீடுகள்: கடந்த பல ஆண்டுகளாகவே சிரியாவின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களில் இந்தியா முதலீடு செய்து வருகிறது. சிரியாவின் எண்ணெய் துறையில் இந்தியா இரண்டு மிக முக்கிய முதலீடுகளைச் செய்துள்ளது. அதேபோல அனல் மின் நிலைய திட்டத்திற்காகவும் சிரியாவுக்கு 240 மில்லியன் டாலர் கடனை இந்தியா வழங்கியுள்ளது. இது தவிர சிரியாவில் விவசாயம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் இந்தியா கணிசமாக முதலீடு செய்துள்ளது.

Related Post