சென்னை: உதயநிதி ஸ்டாலின் இல்லை என்றால் எங்களின் மகள் காசிமா அமெரிக்காவில் நடந்த 6வது உலக்கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் சாதித்து இருக்க முடியாது என்று அவரது தாய் மும்தாஜ் உருக்கமாக கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த மாதம் 6வது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த காசிமா (வயது 17) 3 தங்க பதக்கங்களை வென்று சாதித்துள்ளார். மகளிர் பிரிவில் நடந்த தனிநபர், இரட்டையர், குழு உள்ளிட்ட பிரிவுகளில் அவர் சிறப்பாக வென்று தங்கப்பதக்கங்களை வென்று சாம்பியன் ஆனார்.
காசிமா, சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். தேனாம்பேட்டை மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் காசிமாவின் தந்தை பெயர் மெகபூப் பாஷா. தாய் பெயர் மும்தாஜ். தந்தை மெகபூப் பாஷா ஆட்டோ ஓட்டி வருகிறார். ஏழ்மை நிலையில் இருந்தாலும் கூட மகளின் ஆசையை நிறைவேற்ற மெகபூப் பாஷா தனது வருமானத்தை செலவு செய்து ஊக்கப்படுத்தினார்.
அமெரிக்கா போட்டிக்கு செல்ல காசிமாவுக்கு பணம் இல்லாத நிலையில் கடந்த கடந்த ஜுலை மாதம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1.50 லட்சம் ரூபாய் வழங்கி ஊக்கப்படுத்தினார். அதை வைத்து அமெரிக்கா சென்ற காசிமா 3 பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்று சாம்பியனாகி உள்ளது. தற்போது முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் கேரம் வீராங்கனை காசிமாவிற்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளார். இதனால் காசிமா மற்றும் அவரது குடும்பம் ஹேப்பியாகி உள்ளது. "ஒன் இந்தியா தமிழ்" ஊடகத்துக்கு காசிமாவின் தந்தை மெகபூபா பாஷா - தாய் மும்தாஜ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இதுபற்றி காசிமாவின் தந்தை மெகபூபா பாஷா கூறுகையில்,‛‛காசிமா இப்போது உலககோப்பையில் ஜெயித்து வந்துள்ளார். சின்ன வயதில் 6 வயதில் இருந்தே பயிற்சி பெற்றார். 7 வயதில் இருந்தே போட்டியில் பங்கேற்க தொடங்கினார். அண்ணனை பார்த்து அவர் விளையாட ஆரம்பித்தார். என் மகனை தான் கேரமுக்கு தயாராக்க வேண்டும் என்று இருந்தேன். ஆனால் குடும்ப சூழல் காரணமாக அவனை வேலைக்கு அனுப்பிவிட்டேன்.
சென்னையில் மட்டும் 100 சீனியர் கேரம் பிளேயர்ஸ் உள்ளனர். அவர்களை பார்த்து தான் என் மகனும் உற்சாகமாகினான். கல்லூரி படிக்கும்போதே ஜுனியர் டைட்டில் ஜெயித்தார். குடும்ப கஷ்டத்தால் அதன்பிறகு வேலைக்கு சென்றார். அதன்பிறகு காசிமா கேரம் விளையாட தொடங்கினர். இப்போது சாதித்துள்ளார். எங்களின் கனவை அவர் நிறைவேற்றி உள்ளார். இதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். நான் என் அப்பாவிடம் இருந்து விளையாட்டை கற்று கொண்டேன். நான் பசங்களுக்கு கோச்சிங் கொடுக்கிறேன். நான் அதிக நேரத்தை கேரமில் தான் செலவிட்டு வருகிறேன்'' என்றார்.
ஆட்டோ டிரைவராக இருந்தாலும் கூட பையன் நல்ல ஆபிஸ் வேலைக்கு போக வேண்டும். மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன். படிப்பை முடித்து உடனடியாக பெரிய வேலைக்கு செல்வது என்பது கஷ்டம். ஆனால் ஸ்போர்ட்ஸ் என்றால் உடனடியாக அரசு பணி கிடைக்கும் என்ற உணர்வு வந்தது. அதனால் தான் அவர்களை கேரம் போட்டிக்கு கொண்டு வந்தேன். காசிமா இப்போது இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஸ்பான்ஷர்ஷிப்பில் இருக்கிறார். இதனால் நெருக்கடி குறைந்தது. எனக்கு சுமை குறைந்தது. சிறப்பு கோச் என்றால் மரிய இருதயம் சார் தான். அவர் தான் இன்டர்நேஷனல் போட்டிகளுக்கு உதவி செய்கிறார்.
காசிமா கடுமையாக உழைக்கிறார். குறைந்தது ஒரு நாளில் 8 மணிநேரம் விளையாட வேண்டும். பள்ளிகளில் காசிமாவுக்கு நிறைய சலுகைகள் வழங்கப்பட்டது. பள்ளி காலத்தில் நிறைய கேம்களில் ஜெயித்து பதக்கங்களை வாங்கி உள்ளார். உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை கடவுள் கொடுத்துள்ளார்'' என்றார்.
இதுபற்றி காசிமாவின் தாய் மும்தாஜ் கூறுகையில், ‛‛எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எங்கள் மகள் உலக கோப்பை போட்டியில் வெல்ல வேண்டும் என்பது தான் எங்களின் கனவு. தற்போது அதை மகள் செய்துவிட்டார். அவங்க அப்பா ஆட்டோ ஓட்டி தான் குடும்பத்தை காப்பாற்றினார். அதேபோல் பயிற்சியும் வழங்கினார். உதயநிதி ஸ்டாலின் உதவாவிட்டால் என் மகளால் போட்டிக்கு சென்றிருக்க முடியாது'' என்றார்.
இதுபற்றி காசிமாவின் அக்காள் அசினா கூறுகையில், ‛‛எங்களின் கனவு நனவாகிவிட்டது. எங்களின் வீடியோவை பார்த்தால் உங்களுக்கே தெரியும். என் தங்கை இன்னும் நிறைய ஜெயிக்க வேண்டும். ஏனென்றால் அவள் மட்டும் கடினமாக உழைக்கவில்லை. என் அப்பா உள்பட குடும்பமே உழைத்தது. இதனால் அவள் இன்னும் நிறைய சாதனைகளை படைக்க வேண்டும். அடுத்து வரும் உலகக்கோப்பை போட்டியில் வெல்ல வேண்டும்'' என்றார்.