சென்னை: மத்திய பாஜக அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மத்திய பாஜக அரசு, அண்மையில் 'விஸ்வகர்மா யோஜனா' என்ற ஒரு திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம் குலக் கல்வி முறையை திணிக்க பாஜக சதி செய்வதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டினார். திராவிடர் கழகம் சார்பில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
'விஸ்வகர்மா யோஜனா' என்ற மத்திய அரசின் திட்டத்தைக் கண்டித்து நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.
பரம்பரை பரம்பரையாக ஜாதி தொழிலையே செய்ய வேண்டும் என்று பிள்ளைகளின் கல்விக் கண்ணைக் குத்தும் இந்தத் திட்டத்திற்குத் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து அனைத்து சமூகநீதிக் கொள்கை சார்ந்த கட்சிகளும் ஒருங்கிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் இன்று விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்தும், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கோஷம் எழுப்பினர். மேலும், சனாதனைத்தைச் சாய்ப்போம், சமதர்ம சமுதாயம் படைப்போம் என்றும் தொடர் முழக்கங்களை எழுப்பினர்.