கோட்டைச்சாமியா? வேட்டியை மாற்றிக் கட்டிய ரகுபதி.. திக்கித் திணறிய முதல்வர்! அதிமுக நேரடி அட்டாக்!

post-img
சென்னை: எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில், டங்ஸ்டன் விவகாரத்தில் எழுப்பிய நேரடியான கேள்விக்கு கடைசிவரை பதிலளிக்காமல் திணறிய திமுக அரசை தமிழக மக்கள் பார்த்து சிரித்ததை மறைக்க, சட்ட மந்திரி ரகுபதி தன்னிலை மறந்து பிதற்றியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”திராவிட மாடல் ஆட்சி என்று கூறும் இந்த அரசின், மக்கள் விரோத அரசின் செயல்பாடுகளையும், உண்மை நிலவரங்களையும் பொது வெளியில் வெளிப்படுத்த முயற்சித்தாலே கைது, வழக்கு என்று அடக்குமுறையினை கையாள்கிறது சர்வாதிகார திமுக ஆட்சி. எங்களது கழகப் பொதுச் செயலாளர் 9.12.2024 அன்று சட்டமன்றத்தில், டங்ஸ்டன் சுரங்கம் குறித்து ஏல அறிவிப்பு வெளியான 2024 பிப்ரவரி மாதம் முதல், 'இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்க ஏல உரிமை இறுதி செய்யப்பட்டதாக மத்திய சுரங்க அமைச்சகம் நவம்பர் 7 அன்று வெளியிட்ட இறுதி அறிவிக்கை வரை, 10 மாதங்கள் திரு. ஸ்டாலினின் திமுக அரசு எதிர்ப்பைக் காட்டாததற்கு காரணம் என்ன என்று, பலமுறை உண்மையைச் சொல்லும்படி உரக்க வலியுறுத்தியும், நேரடியாகக் கேட்ட கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல் 'வழ வழா, கொழ கொழா' என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் திக்கித் திணறியதை நாடே பார்த்தது. மேலும், டங்ஸ்டன் பிரச்சனையில் அப்பகுதி மக்களின் எதிர்ப்பிற்குப் பிறகு, 13 நாட்கள் தாமதமாக 20.11.2024 அன்று திரு. ஸ்டாலின், பாரதப் பிரதமருக்கும், மத்திய சுரங்க அமைச்சகத்திற்கும் எழுதிய கடிதத்திற்கு, சுரங்க அமைச்சகம் 20.11.2024 அன்றே எழுதிய பதில் கடிதத்தில் கூறியவற்றை எடுத்துரைத்த எங்களது புரட்சித் தமிழருக்கு நேரடியாக பதிலளிக்காமல், தலையைச் சுற்றி மூக்கை தொட்ட கதையாக, அதுதான் இது என்றும், மேலும், நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள், சுரங்கம் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) 2023-ம் ஆண்டு திருத்தச் சட்டத்தை (Mines and Minerals (Development and Regulation) Act (MMDR Act)) 660T எதிர்க்கவில்லை என்பதற்கும் நேரடியாக பதிலளிக்க இந்த அரசு திணறியதை, ஒருதலைப்பட்சமாக ஒளிபரப்பு செய்து வரும் சட்டமன்றத் தொலைக்காட்சி, தெரியாத்தனமாக நேரடியாக ஒளிபரப்பு செய்ததை உலகமே பார்த்து கைக்கொட்டி சிரித்ததை தமிழக மக்கள் மறக்கவில்லை வேட்டியை மாற்றிக் கட்டி, திமுக-விற்கு மாறிய திரு. ரகுபதி, எங்களது பொதுச் செயலாளர் குறித்து பேசுவதற்கு அருகதை கிடையாது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் உழைப்பால் சட்டமன்ற உறுப்பினர் ஆகிய நீங்கள், அம்மா அவர்களின் கருணையால் அமைச்சராக அடையாளம் காட்டப்பட்டீர்கள். திரு. ரகுபதி அவர்களே, பதவியும், அதிகாரமும் வேண்டுமென்று அடிமையாக திமுக-வில் போய் சேர்ந்துகொண்டீர்கள். முகவரி மற்றும் அடையாளம் கொடுத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு துரோகம் இழைத்த திரு. ரகுபதி அவர்களே, உங்களுக்கு, எங்கள் இயக்கத்தைப் பற்றியோ, எங்களின் பொதுச் செயலாளர் பற்றியோ பேசுவதற்கு அருகதை கிடையாது. இனியாவது, இதுபோல் சிறுபிள்ளைத் தனமாக பிதற்றுவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்ய, முயற்சி செய்ய வலியுறுத்துகிறோம்” என கூறியுள்ளார்.

Related Post