ஆட்டத்தை ஆரம்பித்த "நல்ல காலம்".. திருவண்ணாமலை பெட்ரோல் பங்க்கில் பணமழை? இப்ப ஜெயிலுக்கு போன ஜோதிடர்

post-img
சென்னை: "நல்ல நேரம் ஆரம்பமாகிவிட்டது, பெட்ரோல் பங்க் வைத்தால் பணம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டும்" என்று தம்பதியிடம் சொன்ன ஜோதிடர் போலீசில் தற்போது சிக்கியிருக்கிறார்.. சென்னையில் மோசடி செய்த மற்றொரு நபரை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள். சென்னை வேளச்சேரி தம்பதி கவிதா - மணிகண்டன். இவர்கள் 2 பேருமே பெருங்களத்தூரில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள்.. கடந்த 2022ம் ஆண்டு, மே மாதம், ஜாதகம் பார்ப்பதற்காக வல்லாஞ்சேரியை சேர்ந்த ஜோதிடர் வெங்கட சுரேஷ் என்பவரது வீட்டிற்கு இந்த தம்பதி சென்றார்கள். நல்ல காலம்: அப்போது, ஜோதிடர் உங்களுக்கு நல்ல காலம் பிறந்தாச்ச.. நீங்கள் இருவரும் சேர்ந்து பிசினஸ் செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.. இதைக்கேட்டு சபலப்பட்ட தம்பதியும், அப்படியானால் என்ன தொழில் செய்தால், லாபம் அதிகமாக கிடைக்கும்? என்று கேட்டிருக்கிறார்கள். உடனே ஜோதிடரும், "என்னுடைய நண்பர் ஒருவருக்கு 2020ம் ஆண்டு, பெட்ரோல் பங்க் தொடங்குவதற்கு லைசென்ஸ் வாங்கி தந்தேன்.. அவருக்கு இப்போது தொழிலில் நல்ல லாபம் கிடைத்து, வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. உங்களிடம் காலி இடம் இருந்தால் நீங்களும் பெட்ரோல் பங்க் ஆரம்பிக்கலாம்.. அதற்குரிய லைசென்ஸை நான் வாங்கி தருகிறேன்" என்று ஐடியா தந்துள்ளார்.. திருவண்ணாமலை: இதைக்கேட்ட தம்பதியரும், தங்களுக்கு திருவண்ணாமலை, வேட்டவலம் பகுதியில் 65 சென்ட் காலி இடம் இருப்பதாக சொல்லவும், அப்படியானால் நீங்களும் பெட்ரோல் பங்க் ஆரம்பித்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஜோசியரும் ஆசைவார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார். இதையடுத்து தம்பதியை, திருமுடிவாக்கத்தில் உள்ள விஜயபாஸ்கர் என்பவர் வீட்டிற்கு அழைத்து சென்ற ஜோசியர், "இவருடைய அப்பா டெல்லியில் "ரா" பிரிவில் பணிபுரிகிறார். அதனால் அவருக்கு நிறைய அரசியல்வாதிகள், அதிகாரிகளை எல்லாம் தெரியும். நீங்கள் ரூ.85 லட்சம் கொடுத்தால் உங்களுக்கும் பெட்ரோல் பங்க் வைக்க உடனடியாக லைசென்ஸ் வாங்கி தந்துடுவார்" என்றார். அட்வான்ஸ் பணம்: தம்பதியரும், தங்களது வங்கிக் கணக்கில் இருந்து, 2022,ஆகஸ்ட் 29ம் தேதியில் இருந்து, செப்டம்பர் 1ம் தேதிக்குள், அட்வான்ஸ் பணம் ரூ.50 லட்சம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால், பணம் அனுப்பி 2 வருடமாகியும் பெட்ரோல் பங்க் வைக்க லைசென்ஸ் வாங்கி தரவேயில்லை. ஜோசியரிடமும், அவரது நண்பரிடமும் இதை பற்றி பலமுறை கேட்டாலும் முறையான பதிலை சொல்லவில்லையாம். ஒருகட்டத்தில், அடியாட்களை வைத்து கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்கள். அப்போதான் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அறிந்த தம்பதி, போலீசுக்கு ஓடியிருக்கிறார்கள்.. சிக்கிய ஜோதிடர்: பணம் வாங்கிக் கொண்டு பெட்ரோல் பங்க் உரிமம் வாங்கித் தராமல் மோசடியில் ஈடுபட்ட ஜோதிடர் வெங்கட சுரேஷ் மற்றும் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த ஜனவரி மாதம் வேளச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் கவிதா புகார் தந்தார்.. இதுகுறித்த தகவலறிந்த ஜோதிடரும், அந்த நண்பரும் அப்போதே தலைமறைவாகிவிட்டார்கள்.. இதனால், போலீசார் தனிப்படை வைத்து இவர்களை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர்.. கடந்த 11 மாதமாக தேடி வந்த நிலையில், தற்போதுதான் ஜோதிடர் சிக்கியிருக்கிறார்.. அவரை இப்போது போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைத்துள்ளனர்.. ஆனால், தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Related Post