முதல் சம்பளம் 1 லட்சம்; மலேசியாவுக்கு பறந்த ஸ்வேதா! வாழ்க்கையை மாற்றிய சரிகமப

post-img
சென்னை: சரிகமப பாடகி ஸ்வேதா தன் குடும்பத்தின் வறுமை பின்புலம் பற்றிய பல கதைகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். Zee தமிழ் சரிகமப சீசன் 4இல் பலரும் அமன் வெற்றி பெறுவார் என்றுதான் இறுதிப் போட்டி வரை நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அந்தளவுக்கு அவர் உருகி உருகிப் பாடிய பாடல்களைக் பாடி ரசிகர்கள் மனதைக் கவர்ந்திருந்தார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக மகிழன் டைட்டில் வின்னர் பட்டத்தைத் தட்டிச் சென்றார். அதேபோட்டியில் ரன்னர் அப் பட்டத்தைத் தட்டிச் சென்றவர் ஸ்வேதா. மிக எளிமையான குடும்ப பின்புலத்திலிருந்து வந்தவர். அவரது தந்தை கச்சேரிகள் மூலமாக கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் இவரை இசைத் துறைக்குள் ஈடுபட வைத்திருக்கிறார். பலரும் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். அந்த வெற்றி எல்லாம் சாதாரண மக்களைப் போய்ச் சேர்ந்துவிடுவதில்லை. எளிமையான ஒருவர் வெற்றிப்படிக்கட்டுகளைத் தொடும்போது ஏதோ அது பலருக்காக வெற்றியாக மாறிவிடுகிறது. அப்படித்தான் ஸ்வேதாவின் வெற்றி. இவரது தந்தை கிறிஸ்தவர். அம்மா இந்து. இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள். வீட்டில் பல போராட்டங்களுக்குப் பின்னால் திருமணம் நடந்துள்ளது. எனவே வீட்டில் இரண்டு மதக் கடவுளின் வழிபாடும் உண்டு. அதிகமாக ஸ்வேதாவின் வீடு முழுக்க ஏசு கிறிஸ்துவின் படங்கள் உள்ளன. அவர் கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் பல விசயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில், "சின்ன வாடகை வீட்டில் வசித்து வருவதால் வீடு பார்க்கவே அலங்கோலமாகக் காட்சி தரும். வீட்டின் வறுமை காட்டும்படி இருப்பதால் எனது நண்பர்களைக் கூட வீட்டுக்கு அழைத்து வரமாட்டேன். அவர்கள் வீட்டைப் பார்த்து என்னைக் குறைத்து மதிப்பிடுவார்கள் என்ன அச்சம். யாராவது வருகிறேன் எனச் சொன்னாலும் தவிர்த்துவிடுவேன்" என்கிறார். ஒரு காலத்தில் தனது வீட்டு வறுமையைப் பற்றி கவலை கொண்ட இவருக்கு இப்போது உலகம் மதிக்கும் அளவுக்குச் சின்ன மரியாதை கிடைத்துள்ளது. சமீபத்தில் மலேசியா இசைக் கச்சேரிக்குச் சென்று வந்துள்ளார். அதன் மூலம் 1 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இவரால் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு லட்சத்தைப் பார்த்திருக்கிறது இந்தக் குடும்பம். "இப்போது யோசிக்கையில் சாலையோரம் ஒரு ஆதரவும் இல்லாமல் வாழ்கின்ற மக்களைவிட எனக்கு ஒரு வாடகை வீடாவது இருக்கிறதே என்று சந்தோசப்படுகிறேன். நான் பாடி சம்பாதிக்கும் வருமானத்தில் எனக்கு என ஒரு சின்ன வீடு வாங்க ஆசை. அதேபோல் என் வருமானத்தில் சிறிய பங்கை ஆதரவற்று சாலையில் வாழும் மக்களுக்குச் செலவு செய்ய வேண்டும். இதை சொல்வதால் என்னை கிரிஞ் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்" என்கிறார். அப்பா எங்கே தோற்றாரோ அங்கே இருந்து இந்த இவர் வெற்றி பெற்றுள்ளார் என்பதால் உறவினர்கள் அனைவரும் ஸ்வேதாவை பெருமையாகப் பார்க்கிறார்கள். ஸ்வேதாவின் அப்பாவின் தந்தை சிறிய வயதிலேயே மறைந்துவிட்டார். குடும்ப வறுமையால் 12 ஆம் வகுப்பு முடிந்த உடன் கீ போர்டு வாசிக்கப் போய் இருக்கிறார். 300 ரூபாய் சம்பளத்தில் தொடங்கிய அவர் பயணம் 3 ஆயிரத்தை இப்போது தொட்டுள்ளது. மகளின் வெற்றி பற்றிப் பேசிய ஸ்வேதாவின் தந்தை, "என் மகள் டாப் 10 இல் ஒருவராக வந்தால் போதும் என்றுதான் நினைத்தேன். அவள் இந்தளவு வெற்றி பெற்றது உண்மையில் ஒரு அதிர்ஷ்டம்" என்கிறார். ஸ்வேதாவுக்கு எப்படி சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இருக்கிறதோ அதேபோல் தன் திருமண செலவுக்கான பணத்தைத் தானே சம்பாதிக்க வேண்டும் என்ற லட்சியமும் அவர் மனதில் புதைந்து போய் இருக்கிறது.

Related Post