இதுதாங்க 'பட்டர்பிளை எஃபெக்ட்'.. சீனாவின் பெரும் கனவில் மண்ணை வாரி போட்ட சிரியா உள்நாட்டு போர்!

post-img

பெய்ஜிங்: எங்கோ நடக்கும் ஒரு சிறிய மாற்றம் கூட, இன்னொரு இடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை போல, தற்போது சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போர், சீனாவுக்கு டென்சனை கிளப்பியிருக்கிறது. மிக முக்கியமாக அந்நாட்டின் கனவு திட்டத்தில் சிரியா போர் மண்ணை அள்ளி போட்டிருக்கிறது.
இங்கு எல்லாமே ஒன்றை ஒன்று சார்ந்துதான் இருக்கிறது. ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை. எனவேதான் உலகில் ஏதோ ஒரு மூளையில் பனி பாறைகள் உருகினாலும் இங்கு சென்னையில் கடல் மட்டம் அதிகரிக்கிறது. இன்னும் துல்லியமாக சொல்வதெனில் காலநிலை மாற்றத்தால் பனிப்பாறை உருகியதற்கும் விழுப்புரத்தில் மழை கொட்டி தீர்த்ததற்கும் கூட தொடர்பு இருக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. இதுதான் 'பட்டர்பிளை எஃபெக்ட்' (Butterfly effect).

நம்மை போலவே சீனாவும் இப்போது பட்டர்பிளை எஃபெக்ட் காரணமாக வேறு மாதிரியான சிக்கலை எதிர் கொண்டிருக்கிறது. அதாவது மக்களே.. மத்திய கிழக்கில், சீனாவிலிருந்து ஏறத்தாழ 5,800 கி.மீ தொலைவில் உள்ள சிரியா எனும் நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போர், சீனாவின் பெருங்கனவான 'புதிய பட்டுப்பாதை' திட்டத்தில் (Belt and Road) மண்ணை வாரி போட்டிருக்கிறது.
அந்த காலத்தில் சீனாவில் பட்டு வணிகம் சிறப்பாக நடைபெற்று வந்தது. இதை ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்ல ஒரு பாதை பயன்படுத்தப்பட்டது. இது வணிக பாதையாக மாறி 'பட்டுப்பாதை' என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் இப்போது இதை விட எளிய பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. எனவே சீன வணிகத்தை ஐரோப்பிய நாடுகளுக்கு விரிவுபடுத்த புதிய பாதையை அந்நாட்டு அரசு கண்டுபிடித்தது. இதற்கு புதிய பட்டுப்பாதை என்றும் பெயர் வைக்கப்பட்டது. இந்த பாதையின் ஒரு பகுதி சிரியா வழியாக செல்கிறது.
இதற்கு முன்னர் சிரியாவில் ரஷ்ய ஆதரவு அரசாங்கம் அதிகாரத்தில் இருந்தது. ஆனால், இப்போது அமெரிக்க ஆதரவு பெற்ற ஜிஹாதி குழுக்கள் ஆயுதம் ஏந்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. ரஷ்ய ஆதரவு அதிபர் எங்கே போனார் என்றே தெரியவில்லை. எனவே சீனாவின் புதிய பட்டு பாதைக்கான கதவுகள் இனி சிரியாவில் திறக்கப்படாது. ஏனெினல் அதிகாரத்தை அமெரிக்கா ஆதரவாளர்கள்தானே கைப்பற்றியுள்ளார்கள். சீனா பாம்பு எனில், அமெரிக்காதான் கழுகாச்சே!

சீனா மட்டுமல்லாது இந்தியாவும் தற்போது சிரியாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக சில பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக தீவிரவாத தாக்குதல்கள். சிரியாதான் ஐஎஸ்எஸ்ஐ உள்ளிட்ட தீவிரவாத குழுக்களின் சொர்க்க பூமியாக இருக்கிறது. இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால், தீவிரவாத குழுக்கள் மேலும் வலுவடையலாம். இது இன்றைக்கு இல்லாவிட்டாலும் கூட, என்றைக்காவது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
மட்டுமல்லாது சிரியாவில் துருக்கி, ஈரான் மற்றும் சவுதி அரேபியா நாடுகளின் ஆதரவு குழுக்கள் இயங்கி வருகின்றன. இக்குழுக்களுக்கு இடையேயான மோதல் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்றவற்றில் பிரதிபலிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post