புதுச்சேரி முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர். ராமசந்திரன் மறைவு! மு.க. ஸ்டாலின் இரங்கல்!

post-img

சென்னை: புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர். ராமசந்திரன் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ராமசந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.
புதுச்சேரியின் முதல்வராக திமுக சார்பில் ராமசந்திரன் 1980-1983 மற்றும் 1990-1991 வரை முதல்வராக பதவி வகித்திருக்கிறார். இவரது அரசியல் வாழ்க்கை இளம் பருவத்திலேயே தொடங்கிவிட்டது. தனது 39 வயதில் இவர் புதுச்சேரியின் நெட்டப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏவாக தேர்வாகியிருந்தார். இவரின் பதவிக்காலம் இப்படிதான் தொடங்கியது. அப்போது புதுவையில் திமுக-இடதுசாரி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் ராமசந்திரன் பதவி வகித்து வந்தார்.

1969 முதல் 1974 வரையிலும், 1974 முதல் 1977 வரையிலும் இவர் அமைச்சராக இருந்து வந்திருக்கிறார். இந்த அமைச்சர் பதவி அவரது அரசியல் வாழ்க்கையின் மைலேஜை உயர்த்தியது. எனவே 1980ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் இவர் திமுக சார்பில் புதுச்சேரியின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் 1983 வரை முதல்வராகவும் நீடித்தார். அதன் பின்னர் புதுவையின் திமுக அமைப்பாளராக பணியாற்றிய இவர் பின்னர் அதிமுகவுக்கு தாவினார். அங்கும் இதே பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
இருப்பினும் மீண்டும் திமுகவுக்கு வந்த இவர் 1990-1991 வரையிலான திமுக-ஜனதா கட்சி ஆட்சியில் முதல்வராக பதவி வகித்தார். அதன் பின்னர் காங்கிரஸுக்கு தாவினார். கடந்த 2006 முதல் காங்கிரஸில் இருந்து வருகிறார். 94 வயதான இவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல் நலப்பிரச்னைகள் நீடித்து வந்துள்ளன. இதனால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது, "புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரும், புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைப்பாளருமாகிய ராமச்சந்திரன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழகத்தின் சார்பில் முதல்-அமைச்சராக இருந்து, புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திச் சாதனை படைத்தவர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Post