நண்பனை காப்பாற்ற ரஷ்யா செய்த செயல்.. சிரியா அதிபர் அல் அசாத் தப்பியது எப்படி? அவரே தந்த விளக்கம்

post-img
மாஸ்கோ: சிரியா உள்நாட்டு போர் பற்றி முதல் முதலாக அந்த நாட்டில் இருந்து வெளியேறிய அதிபர் பஷர் அல் அசாத் விளக்கம் அளித்துள்ளார். அதில் சிரியாவில் இருந்து வெளியேறும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் ரஷ்யா படையினர் தான் என்னை காப்பற்றி தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்து விட்டனர் என்று சிரியாவில் இருந்து வெளியேறிய அதிபர் பஷர் அல் அசாத் தெரிவித்துள்ளார். சிரியா அதிபராக கடந்த 2000ம் ஆண்டு முதல் இருந்து வந்தவர் பஷர் அல் அசாத். இவருக்கு எதிராக உள்நாட்டு போர் என்பது தொடர்ந்து நடந்து வந்தது. கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை உள்நாட்டு போர் நடந்தது. அப்போது சிரியா அதிபர் பஷர் அல் அசாத்தை ரஷ்யா மற்றும் ஈரான் படைகள் தான் காப்பாற்றின. இதையடுத்து பஷர் அல் அசாத் ஆட்சியை தக்கவைத்து கொண்டார். அதன்பிறகு 8 ஆண்டுகளுக்கு பிறகு உள்நாட்டு போர் தீவிரமாகி உள்ளது. அந்த நாட்டின் அதிபராக உள்ள பஷர் அல் அசாத்துக்கு எதிராக அபு முகமது அல் கோலானி தலைமையிலான ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற அமைப்பினர் தலைமையில் கிளர்ச்சியாளர்கள் போரை தொடங்கின. இவர்கள் ஒவ்வொரு நகராக கைப்பற்றின. கடந்த 8 ம் தேதி ரஷ்யா ராணுவ தளம் மீது தாக்கியதோடு, தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றினர். இதையடுத்து சிரியா அதிபர் பஷர் அல் அசாத் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விமானத்தில் வெளிநாடு தப்பினார். அவர் ரஷ்யாவில் உள்ளார். பஷர் அல் அசாத்துக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. இதனால் அவர் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில் தான் சிரியாவில் இருந்து வெளியேறி ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள மாஜி அதிபர் பஷர் அசாத் முதல் முறையாக நடந்த சம்பவம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். அதோடு தான் வெளியேறியது எப்படி? என்பது பற்றியும் விவரித்துள்ளார். இதுபற்றி அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது: நான் கடந்த 8 ம் தேதி காலையில் டமாஸ்கஸை விட்டு வெளியேறினேன். கடலோர மாகாணமான லடாகியாவில் உள்ள ரஷ்யாவுக்கு சொந்தமான தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து நான் வெளியேறினேன். என்னை பொறுத்தவரை கிளர்ச்சியாளர்களை எதிர்த்து சண்டையிட தான் விரும்பினேன். நான் சிரியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று விரும்பவில்லை. அதேபோல் பதவியை ராஜினாமா செய்து, இன்னொரு நாட்டிடம் தஞ்சமடைய கோர வேண்டும் என்று நான் விரும்பவில்லை. நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட வேண்டும் என்பது தான் என் எண்ணமாக இருந்தது. நாடு தற்போது பயங்கராவதிகளின் கைகளில் சிக்கி உள்ளது. தனிப்பட்ட ஆதாயத்துக்காக நான் ஒருபோதும் பதவியை விரும்பவில்லை. சிரியா மக்களின் நம்பிக்கையுடன் அவர்களால் ஆதரிக்கப்படும் பாதுகாவலராக நான் இருப்பதாக கருதுகிறேன். சிரியா மீண்டும் சுதந்திரமாக செயல்படும்'' என கூறியுள்ளார்.

Related Post