சிவகங்கை: பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக அரசு எல்லா துறைகளிலும் தோற்று போயுள்ளது என பாஜகவின் ஹெச். ராஜா கூறியுள்ளார்.
காரைக்குடியில் பாஜக மூத்தத் தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்ளைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் எல்லாத்துறைகளிலும் தோற்றுப்போன மனித முகமற்ற ஆட்சி இருக்கிறது துரதிர்ஷ்டவசமானது. கழிவுநீர், குடிநீரில் கலந்ததால் பல்லாவரம், குரோம்பேட்டையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வளவு மோசமான நிர்வாகத்தை வைத்துக் கொண்டு அந்த தொகுதியின் எம்எல்ஏவும், அமைச்சருமான தா.மோ. அன்பரசன் கச்சா முச்சா என்று பேசிக் கொண்டிருக்கிறார். செய்தியாளர்களிடம் கூட மரியாதை இல்லாமல் அகம்பாவத்துடன் பேசுகிறார். பிளீச்சிங் பவுடர் ரூ.13 என சொல்லுகிறார், பிறகு எதற்காக ரூ.55க்கு வாங்கினீர்கள் என நிருபர் கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல் கமிஷனரிடம் கேளுங்கள் என்கிறார்.
உங்களுக்கு தெரியாமல் நகராட்சி நிர்வாகம் 10 ரூபாய் பிளீச்சிங் பவுடரை 55 ரூபாய்க்கு வாங்குமா. எதிலும் காசை மட்டுமே குறி வைக்கிறார்கள். அவ்வளவு மோசமான நிர்வாக திறமையற்ற ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. திருவண்ணாமலையில் நடந்துள்ள சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் எல்லாம் வயநாடு போல திருவண்ணாமலை ஆகும் என்று எச்சரிக்கிறார்கள்.
மலையின் மீது சட்ட விதிகளுக்கு புறம்பாக கட்டிடம் கட்டியதால் வயநாடு போல ஆபத்தானது என்கின்றனர். திராவிட முன்னேற்ற கழகத்தின் தனிப்பட்ட வாழ்க்கையில் நெறிமுறை கிடையாது. அதற்கு கண்ணதாசனின் புத்தகம் போதும். அதேபோல ஆட்சியிலும் நெறிமுறை இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் பதில் அளிப்பார்கள். திமுக படுதோல்வியடையும்.
இவர்களின் ஆட்சிக்கு மக்கள் சேற்றை வாரி இறைக்காமல் சந்தனத்தை வாரியா இறைக்க முடியும். அவர் அப்படி நடந்து கொள்ளவில்லையே. அதானி மீது யார் குற்றச்சாட்டு சொல்லியது. அதானி மீது வெளிநாட்டில் ஏதோ வழக்கு உள்ளது. அதை சம்மந்தப்பட்ட நாடு தான் சொல்ல வேண்டும். ஆனால் அப்படி யாரும் சொல்லவில்லையே. அதானி மீது குற்றம் சொல்லும் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமே. சாலையில் செல்பவர்கள் சொல்வதை எல்லாம் பெரிதுபடுத்த முடியாது.
லஞ்சம் கொடுத்தது குற்றம் என்றால், வாங்கியதும் குற்றம் தானே. அப்படியென்றால் லஞ்சம் வாங்கிய திமுகவுக்கு எதிராக காங்கிரலஸ் பேசுமா. நாடாளுமன்ற நுழைவு வாயிலில் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தில் திமுக ஏன் கலந்துகொள்ளவில்லை. ஏன் நழுவினார்கள். வழக்கு தொடர்ந்தால் அதானிக்கு எதிராக மட்டுமல்ல, திமுக அரசு, மு.க. ஸ்டாலின், ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் மீதும் வழக்கு தொடர வேண்டும்.
எதிர்க்கட்சிகள் எலி சுரண்டுவது போல சுரண்டிக் கொண்டிருக்க கூடாது. ஆதாரத்துடன் பேச வேண்டும். மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் எல்லோருமே நண்பர்கள் தான். மழை பெய்வதே காவி நிறத்தில் தான் பெய்கிறதா. வெள்ள பாதிப்பு குறித்து தவெக தலைவர் நடிகர் விஜய் கூறியது கருத்து சரியானது தான்." என்றார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage