சென்னை: அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதற்கு கண்டனம் தெரிவித்தும் பதவி விலக வலியுறுத்தியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வருகை தரும் டிசம்பர் 27-ந் தேதி கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிவித்துள்ளார். அமித்ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் நடத்துவோம் என நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகையும் அறிவித்திருந்தார்.
அரசியல் சாசனம் மீதான விவாதங்களுக்கு நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் பதிலளித்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர் என கோஷம் போடுவது பேஷனாகிவிட்டது.. அம்பேத்கர் பெயருக்கு பதில் கடவுள் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்றார்.
மத்திய அமைச்சராக இருக்கும் அமித்ஷா, அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி உள்ளிட்டோர் அமித்ஷாவின் பேச்சை ஆதரித்தனர். இதனால் நாடாளுமன்றத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் முடக்கி வைத்தன. நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டமும் நடத்தினர். இந்தப் போராட்டம் பெரும் மோதலாகவும் வெடித்தது.
மேலும் நாடு முழுவதும் தற்போது வரை அமித்ஷாவுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தில் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர்- அமித்ஷாவின் கொடும்பாவி கொளுத்துகின்றனர்.
இந்த நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமித்ஷா வரும் 27-ந் தேதி தமிழ்நாடு வருகிறார். அன்றைய தினம் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கறுப்புக் கொடி போராட்டம் நடத்தும் என அதன் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் டிசம்பர் 27-ந் தேதி தமிழ்நாட்டில் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தும் என்று அதன் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிவித்துள்ளார்.