கூகுளின் தாய் நிறுவனமான Alphabet Inc-ன் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை, உலகம் முழுவதும் தொழில்நுட்பத் துறையில் மிகவும் பிரபலமானவர் என்பதில் சந்தேகமில்லை.
இவர் 2022-ல் 22.6 கோடி டாலர் சம்பளம் பெற்றதால், உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தொழில்நுட்ப நிர்வாகிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டார். இது இந்திய மதிப்பில் ரூ. 1854 கோடி (ஒரு நாளைக்கு ரூ. 5 கோடிக்கு மேல்). சுந்தர் பிச்சை சம்பளத்தின் பெரும்பகுதி அவர் பங்குகள் மூலம் பெற்ற வருமானத்தின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் பங்குகள் ரூ.1788 கோடி மதிப்புடையவை. ஐஐடி காரக்பூரில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த சுந்தர் பிச்சை, 2019-ல் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டின் மதுரையில் ஜூன் 10, 1972-ல் பிறந்த சுந்தர் பிச்சை சென்னையில் வளர்ந்தார். ஐஐடியில் பிடெக் முடித்த பிறகு, மேற்படிப்புக்காக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். பின்னர் அமெரிக்காவின் வார்டன் ஸ்கூலில் எம்பிஏ படித்து 2004-ல் கூகுளில் சேர்ந்தார். ஆனால் சுந்தர் பிச்சையின் வெற்றியில் அவரது மனைவி அஞ்சலி பிச்சை முக்கியப் பங்கு வகித்துள்ளது பலருக்கும் தெரியாது.
அஞ்சலியும் சுந்தர் பிச்சையும் முதலில் கரக்பூரில் ஐஐடியில் சந்தித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். அறிக்கைகளின்படி, சுந்தர் பிச்சை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர, கூகுளை விட்டு வெளியேற நினைத்துள்ளார். ஆனால் அஞ்சலி அவரை கூகுளில் இருக்குமாறு அறிவுறுத்தினார். இதன் பயனாக பின்னாளில் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி ஆனார் சுந்தர்.
அஞ்சலி பிச்சை Intuit என்ற மென்பொருள் நிறுவனத்தில் வணிக இயக்க மேலாளராக பணிபுரிகிறார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்த இவர் காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பொறியியல் படித்தார். அவரது தந்தை கோட்டாவில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஊழியர். அஞ்சலி 1993-ல் பொறியியல் படிப்பை முடித்தார்.
அவருக்கும் சுந்தர் பிச்சைக்கும் கல்லூரியில் படிக்கும் போதே நிச்சயதார்த்தம் நடந்தது. சுந்தர் பிச்சை பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க அமெரிக்கா சென்றதையடுத்து அவர்கள் நீண்ட தூர உறவில் இருந்தனர். தவிர, அஞ்சலி 1999 முதல் 2002 வரை அக்சென்ச்சரில் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.