மதுரை: தேனியில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் நேற்று சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். இன்று அவரை மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்திய நிலையில் டிசம்பர் 20ம் தேதி வரை 2 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரபல யூடியூபராக இருப்பவர் சவுக்கு சங்கர். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி தேனிபழனிச்செட்டிப்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். அவருடன் டிரைவர் ராம்பிரபு மற்றும் ராஜரத்தினம் என்பவர் இருந்தனர்.
இந்த வேளையில் கோவை போலீசார் சவுக்கு சங்கரை ஏப்ரல் 4ம் தேதி கைது செய்தனர். பெண் போலீஸ் பற்றி தவறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரது காரில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது காரில் தலா 100 கிராம் எடையுடன் 4 பாக்கெட்டுகளில் கஞ்சா இருந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக தனியே தேனி போலீசார் 7 பிரிவுகளில் கைது செய்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கர், டிரைவர் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த மகேந்திரன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் உள்ளிட்டவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே தான் பெண் போலீஸ் பற்றி அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது தொடர்ந்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இருப்பினும் அந்தகுண்டர் சட்டம் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டதோடு, சவுக்கு சங்கரும் ஜாமீனில் வெளியே வந்தது.
இதற்கிடையே தேனி கஞ்சா வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சவுக்கு சங்கரை தவிர மற்றவர்கள் ஆஜராகினர். சவுக்கு சங்கர் மட்டும் ஆஜராகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பழனிசெட்டிபட்டி போலீசார் சவுக்கு சங்கரை நேற்று சென்னையில் கைது செய்தனர்.
அதன்பிறகு வாகனத்தில் தேனி அழைத்து சென்றனர். இன்று சவுக்கு சங்கரை போலீசார் மதுரை போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது சவுக்கு சங்கரை 2 நாள் நீதிமன்ற காவலில் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சவுக்கு சங்கர் வரும் 20ம் தேதி சிறையில் அடைக்கப்பட உள்ளார்.