சென்னை: நடிகை சோபிதா துலிபாலாவுக்கும், நடிகர் நாக சைதன்யாவுக்கும் இன்று திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில், சோபிதா துலிபாலாவின் முன்னாள் காதலர் பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது.
2016 ஆம் ஆண்டு அனுராக் கஷ்யப்பின் ராமன் ராகவ் படத்தின் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகை சோபிதா துலிபாலா. இவருக்கு திரைப்படங்கள் அவ்வளவாக கைகொடுக்கவில்லை. இருப்பினும் ஓடிடி தளத்தில் இவருடைய நடிப்பில் வெளியான வெப்சீரிஸ்கள் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், இயக்குநர் மணிரத்னத்தின் பென்னியின் செல்வன் படத்தின் மூலம் நடிகை சோபிதா பிரபலமானார்.
தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகரான நாகார்ஜூனாவின் மூத்த மகனும், நடிகை சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. மெஹந்தி முதல் ஹல்தி வரை நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் திருமணம் களைகட்டியது. இவர்களின் திருமணம் தான் இப்போது தென்னிந்திய திரையுலகின் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் நாகசைதன்யா, சோபிதா துலிபாலா திருமணம் இன்று இரவு நடைபெறவுள்ளது. இதில், தெலுங்கு, மலையாளம், தமிழ் என திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில், நாக சைதன்யாவுடன், சோபிதா துலிபாலா டேட்டிங் செய்வதற்கு முன்பே ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
நாக சைதன்யாவிற்கு முன்பே பிரபல ஃபேஷன் டிசைனரான பிரணவ் மிஸ்ரா என்பவருடன் சோபிதா துலிபாலா ரிலேசன்ஷிப்பில் இருந்துள்ளார். பிரணவ் மிஸ்ரா ஹியூமன் பிராண்டின் இணை நிறுவனராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். 2019 ஆம் ஆண்டில் ஃபேஷன் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அப்போதுதான் இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு அரும்பியது.
சில ஆண்டுகள் இருவரும் டேட்டிங் செய்து வந்துள்ளனர். இவர் முன்னாள் காதலர் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், போஸ்ட்களில் இன்டராக்ஷன் செய்தனர். ஆனால், காதல் என்பதுபோல் வெளியே அறிவித்துக் கொள்ளவில்லை. பின்னர், இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக கூறப்படுகிறது. இதுவரையிலும் சோபிதா துலிபாலாவுக்கும், பிரணவ் மிஸ்ராவுக்கும் இடையேயான பிரிவுக்கான காரணம் என்னவென்பது உறுதியாக வெளியாகவில்லை.
தென்னிந்திய திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள சமந்தா தற்போது பல்வேறு படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார். அதேபோல, தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகரான நாகார்ஜூனாவின் மூத்த மகனான நாக சைதன்யாவும் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு நாகசைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.
தெலுங்கில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்தபோது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களது திருமண உறவு சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் தங்களது திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். நாகசைதன்யாவின் திருமண முறிவுக்குப் பின் மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டார் சமந்தா. இதனால், மனதளவிலும், உடல் ரீதியாகவும் பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வந்தார் சமந்தா.
பின்னர், நாக சைதன்யா சோபிதாவுடன் டேட்டிங் செய்து வந்தார். இவர்கள் இருவரின் புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகி இவர்களது காதலை உறுதி செய்து வந்தது. ஆரம்பத்தில் தங்களது காதல் குறித்து சோபிதாவும், நாக சைதன்யாவும் வெளியில் சொல்லவில்லை. இந்நிலையில், இவர்களுடைய நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த நிலையில். இன்று ஹைதராபாத்தில் திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Weather Data Source: Wettervorhersage 21 tage