சென்னை: இன்னும் முழுசாக கட்சியே ஆரம்பிக்கல அதுக்குள்ள இப்படியா என்பது போல் தான் இருக்கிறது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் நிலைமை. கட்சி மாநாடு நடத்தினாலும் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், பிற நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு முழுமையாக வெளியிடப்படாத நிலையில், பல மாவட்டங்களில் கோஷ்டி பூசல் வலுத்துள்ளது. குறிப்பாக திண்டுக்கல் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் மோதல் போக்கை கையாண்டு வருவது கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்து இருக்கிறார் விஜய். அவரை பின்பற்றி ரசிகர்களாக இருந்து தொண்டர்களாக உருவாகி இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். அரசியலில் தனது முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக முடித்துள்ள விஜய் அடுத்த சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறார்.
இதற்கிடையே தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் நியமனம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் பட்டியல் கூட அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், மாநில தலைமை நிர்வாகிகள் சிலரின் பெயர் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தவெகவில் குழப்பம்: ஆனால் உள்ளூரில் தாங்கள்தான் தலைமை என பலர் பந்தா காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே ரசிகர் மன்றங்களில் இருந்தவர்களுக்கும், தற்போது புதிதாக நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதுவையான நிர்வாகியின் ஆதரவாளர்களுக்கும் இடையே நிறைய பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக 'பொது'வானவரின் ஆதரவாளர்களுக்கே பதவிகள் வாரி வழங்கப்படுவதாகவும், இதனால் ரசிகர் மன்றம். மக்கள் இயக்கம் என விஜய்க்கு போஸ்டர் அடித்து பாலாபிஷேகம் செய்த நிர்வாகிகள் புலம்பி வருவதாக புகார் கூறப்படுகிறது.
கோஷ்டி மோதல்: கட்சி மாநாடு நடத்தினாலும் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், பிற நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு முழுமையாக வெளியிடப்படாத நிலையில், பல மாவட்டங்களில் கோஷ்டி பூசல் வலுத்துள்ளது. குறிப்பாக திண்டுக்கல் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் மோதல் போக்கை கையாண்டு வருவது கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. காரணம், திண்டுக்கல்லில் நடைபெற்ற பெரியார் சிலை மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் வெளிப்படையாகவே தெரிந்தது.
பல பிரிவுகள்: திண்டுக்கல்லில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, ஒன்றிய அணி , மாணவர் அணி என தனித்தனியாக பிரிந்து பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.ஆனால், தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் ஒற்றுமை இல்லாதது போல் , நான்கு அணியாகப் பிரிந்து தங்களுக்குள் யார் பெரியவர் என்பது போல செயல்பட்டது உட்கட்சி விவகாரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
தற்கொலை முயற்சி: இந்நிலையில் மோதலின் உச்சமாக, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே நிலைமை தான் ராமநாதபுரம் மாவட்ட தமிழக வெற்றி கழகத்திலும் நிலவுகிறது. மாவட்ட தலைவரை நீக்கியதாக மாவட்ட அமைப்பாளரும், மாவட்ட அமைப்பாளரை நீக்கியதாக மாவட்ட தலைவரும் அறிவித்திருக்கின்றனர்.
ராமநாதபுரம் தவெக: தற்போது அக்கட்சியில் மாவட்ட தலைவராக மலர்விழி என்பவர் இருக்கும் நிலையில் கட்சியைச் சேர்ந்த ராஜா என்பவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக மலர்விழி அறிவித்தார். மேலும் அவருடன் இணைந்து செயல்பட்டதாக குணசேகரன், முருகேசன் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அடுத்தடுத்த அறிவிப்பு: இந்த நிலையில் மாவட்ட சீரமைப்பு குழு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழு என்ற பெயரில் ராஜா ஆதரவாளர்கள் மாவட்ட தலைவர் பதவியில் இருந்து மலர்விழியை விடுவிப்பதாகவும், கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இராமநாதபுரம் முருகேசன் மாவட்ட தலைவராகவும், ராஜா மாவட்ட இணை தலைவராகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விஜய்க்கு கோரிக்கை: இப்படியாக பெயர் சொல்லும் படி இருக்கும் சில மாவட்டங்களில் வெளிப்படையாக மோதல் தெரியும் நிலையில் பல மாவட்டங்களில் இதே நிலைமைதான் உள்ளது. எனவே விரைவில் நிர்வாகிகளை அறிவித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.