எம்ஜிஆர் - என்டிஆர் போல் முதல் தேர்தலில் விஜய் வெல்வாரா? சத்தியம் டிவி சர்வேயில் மக்கள் சொன்ன பதில்

post-img
சென்னை: 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து எம்ஜிஆர், என்டிஆர் போல் விஜய் ஜெயிக்க முடியுமா? என்ற கேள்வியுடன் சத்தியம் டிவி மாநிலம் முழுவதும் மேற்கொண்ட சர்வேயில் நடிகர் விஜய்க்கு பாசிட்டிவான பதிலை மக்கள் கொடுத்துள்ளனர். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். கட்சி தொடங்கும்போதே 2024 லோக்சபா தேர்தலில் போட்டியில்லை. 2026 சட்டசபை தேர்தலில் தான் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அறிவித்தார். அதன்படி தற்போது 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தேவையான பணிகளை விஜய் தொடங்கி உள்ளார். முதற்கட்டமாக விஜய் கடந்த அக்டோபர் மாதம் 27 ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் முதல் அரசியல் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். தற்போது மாநிலம் முழுவதும் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளார். தற்போது விஜய் கடைசி படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு அவர் முழுநேரம் அரசியலில் ஈடுபட உள்ளார். இதனால் 2026 சட்டசபை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் தான் சத்தியம் டிவி சார்பில் 2026 சட்டசபை தேர்தலில் விஜயின் தாக்கம் எப்படி இருக்கும்? என்பதை அறியும் வகையில் மெகா சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வேயில் எம்ஜிஆர், என்டிஆர் போல் விஜய் ஜெயிக்க முடியுமா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 42 சதவீதம் பேர் ஆம் என்றும், 41 சதவீதம் பேர் இல்லை என்றும் 17 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர். அதாவது தமிழகத்தில் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி முதல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். அதேபோல் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் நடிகராக இருந்து தெலுங்கு தேசம் கட்சியுடன் என்டிஆரும் முதல் தேர்தலில் ஆட்சியை பிடித்தார். தற்போது நடிகர் விஜயும் கட்சி தொடங்கி 2026ல் முதல் முறையாக சட்டசபை தேர்தலை எதிர்கொள்கிறார். இதனால் தான் இந்த கேள்வி என்பது சர்வேயில் கேட்கப்பட்டது. அதற்கு சர்வேயில் பங்கேற்ற 42 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாகமாகி உள்ளனர். இதுதவிர சர்வேயில் விஜயின் தவெகவிற்கு வாக்களிப்பீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சர்வேயில் பங்கேற்றவர்களில் 41 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர். அதேவேளையில் 27 சதவீதம் பேர் இல்லை என்றும், 28 சதவீதம் பேர் தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம் என்றும், 4 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர். அதேபோல் இந்த சர்வேயில் இளைய தலைமுறையின் வாக்கு விஜய்க்கு முழுமையாக கிடைக்குமா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சர்வேயில் பங்கேற்றவர்களில் 60 சதவீதம் பேர் கிடைக்கும் என்றும், 14 சதவீதம் பேர் கிடைக்காது என்றும், 21 சதவீதம் பேர் பாதியளவுக்கு கிடைக்கும் என்றும், 5 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் பதிலளித்துள்ளனர்.

Related Post