மகாபிரபு வந்தாச்சா? தேர்தல் மன்னன் பத்மராஜன் தெலுங்கானாவில் வேட்பு மனுத் தாக்கல்-

post-img

ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கிய போது தமிழகத்தைச் சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜனும் மனுத் தாக்கல் செய்தார்.
தெலுங்கானா சட்டசபைக்கு இம்மாதம் 30-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வெள்ளிக்கிழமையன்று தொடங்கியது. தெலுங்கானாவில் களத்தில் உள்ள ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, மஜ்லிஸ் கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்டவை பெரும்பான்மையான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன.


தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் கமரெட்டி மற்றும் கஜ்வெல் தொகுதிகளில் போட்டியிடுகிறார். சந்திரசேகர ராவ் போட்டியிடும் கஜ்வெல் தொகுதியில் முதல் நாளே தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.


தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பத்மராஜன். நாட்டில் எங்கு எந்த தேர்தல் நடந்தாலும் முதல் நபராக வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிடுவதாலேயே 'தேர்தல் மன்னன்' என்ற பட்டப் பெயர் பத்மராஜனுக்கு கிடைத்துவிட்டது.


பத்ம்ராஜன் இதுவரை 5 ஜனாதிபதி தேர்தல்கள், 5 துணை ஜனாதிபதி தேர்தல்கள், 32 லோக்சபா, 72 சட்டசபை, 3 எம்.எல்.சி, 1 மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கும் தொகுதிகளுக்கும் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார்.


நாட்டின் அரசியல் தலைவர்களான மறைந்த வாஜ்பாய், ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்டோருக்கு எதிராகவும் வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கிறார் பத்மராஜன். தற்போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு எதிராக முதல் முறையாக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார் பத்மராஜன். இது பத்மராஜன் தாக்கல் செய்யும் 237-வது வேட்பு மனு என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Post