வாஷிங்டன்: மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் நடத்தி இருக்கும் ஆய்வில், உலகத் தலைவர்களின் வரிசையில் 76 சதவீத அங்கீகார மதிப்பீட்டுடன் பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச தரவரிசையில் முதலிடத்தை பிடித்து உள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமான மார்னிங் கன்சல்ட் உலகத் தலைவர்களில் யாருக்கு அதிக அங்கீகார மதிப்பீடு உள்ளது என்பதை ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டு உள்ளது. அதன் படி, 76 சதவீத மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை ஆதரிக்கின்றனர். அதே நேரம் 18 சதவீத மக்கள் அதை ஆதரிக்கவில்லை. ஆறு சதவீத பேர் அதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட். அவர் பெற்று உள்ள அங்கீகார மதிப்பீடு 64 சதவீதம். மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவெல் லோபெஸ் ஓப்ரடோ 61 சதவீதம் அங்கீகார மதிப்பீட்டுடன் மூன்றாவது இடத்தை பிடித்து உள்ளார். இதற்கு முந்தைய மதிப்பீடுகளிலும் பிரதமர் மோடி முதலிடத்தைப் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 40 சதவீத அங்கீகாரம் உள்ளது, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 37 சதவீதம் ஆதரவு உள்ளது. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் 27 சதவீத அங்கீகார மதிப்பீட்டை பெற்று இருக்கிறார். பிரான்ஸ் அதிபரான இம்மானுவேல் மேக்ரான் வெறும் 24 சதவீத ஆதரவையே பெற்று உள்ளார்.
இந்தியா அண்மையில் தலைநகர் டெல்லி ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டியது. அந்த மாநாட்டில் 40 க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். இந்த தலைவர்களின் உச்சி மாநாட்டில் கொண்டு வரப்பட்ட டெல்லி பிரகடனம் முழுமையாக ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அனைத்து உலக சக்திகளையும் ஒரே பக்கத்தில் கொண்டு வந்து ரஷ்யா - உக்ரைன் போர் போன்ற பிளவுபடுத்தும் பிரச்சினையில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்ற அம்சமும் அந்த பிரகடனத்தில் இடம்பெற்று இருந்தது. அந்த உச்சி மாநாட்டின் முடிவில், பிரதமர் மோடி பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவுக்கு கைத்தடியை வழங்கி ஜி20 தலைமை பொறுப்பை ஒப்படைத்தார்.
சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வரும் நவம்பர் மாதத்தில் காணொலி காட்சி வாயிலாக ஒரு ஜி 20 அமர்வை நடத்த அவர் முன்மொழிந்தார்.
இந்தியா தலைமை பதவி வகித்த காலத்தில் இது மக்களுக்கான ஜி 20யாக இருந்ததாக தெரிவித்த பிரதமர் மோடி, உலகில் உள்ள நலிவடைந்த மற்றும் வளரும் நாடுகளின் குரலை உயர்த்துவதே டெல்லி மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருந்து என்றும், இந்தியாவுடைய ஜி 20 தலைமைத்துவத்திற்கான கருப்பொருளும் 'ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்பதாகவே இருந்தது என்றார்.