திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வான்துலுக்கப்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஆசைதம்பி என்பவர் தனது வீட்டில் லர் ஜெராக்ஸ் எந்திரம் வைத்து உள்ளார். அதில் புதிய 100 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்த அவர், அதனை வைத்து காய்கறி கடையில் பொருள் வாங்கியுள்ளார். கடைக்காரர் நோட்டை பார்த்து சந்தேகம் அடைந்ததால் கையும் களவுமாக சிக்கயுள்ளார். 6 மாதங்களாக வீட்டில் கள்ளநோட்டு அச்சடித்து வந்தது தெரியவந்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வான்துலுக்கப்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்த 59 வயதாகும் ஆசைதம்பி என்பவருக்கு வில்லங்கமான ஆசை பிறந்துள்ளது. அந்த ஆசையை நிறைவேற்ற வீட்டில் கலர் ஜெராக்ஸ் எந்திரம் வைத்து உள்ளார். அதில் 100 ரூபாய் நோட்டுகளை அச்சடித்தாராம்.
தொடர்ந்து ஆசைதம்பி கடந்த டிசம்பர் 15ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு பாபநாசம் மெயின் ரோட்டில் மருதம்நகரில் உள்ள காய்கறி கடை ஒன்றில் பொருட்கள் வாங்கியிருக்கிறார். அதற்கு கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்த ரூ.100 கள்ளநோட்டை கடைக்காரரிடம் கொடுத்திருக்கிறார். அதை வாங்கி பார்த்த கடைக்காரர் முகமது சபீர் சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து கேட்ட போது ஆசைதம்பி பேச்சு வித்தியாசமாக இருந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து வைத்து விக்கிரமசிங்கபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் உடனடியாக பாபநாசம் மெயின் ரோட்டில் மருதம்நகரில் உள்ள காய்கறி கடைக்கு சென்றனர். அவரிடம் இருந்த பணத்தை வாங்கி பார்த்தனா். அவர் வைத்திருந்த சுமார் 25 எண்ணம் கொண்ட 100 ரூபாய் அனைத்தும் கலர் ஜெராக்சில் அச்சடித்த கள்ளநோட்டு என்பது அவர்களுக்கு தெரியவந்தது. மொத்தம் ரூ.2,500 மதிப்புக்கு அச்சடித்த கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் ஆசைதம்பி கள்ள ரூபாய் நோட்டுகளை பல்வேறு கடைகளில் கொடுத்து கடந்த 6 மாதங்களாக பொருட்கள் வாங்கி வந்ததும் போலீஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து, ஆசைதம்பியை கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்த கலர் ஜெராக்ஸ் எந்திரமும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.