சென்னை:
அண்ணா பற்றி அவதூறாகப் பேசிய அண்ணாமலை மன்னிப்பு கோர வேண்டும். அண்ணாவின் கால் தூசிக்கும் ஈடாகாத அண்ணாமலை போன்றவர்கள், அவரைப் பற்றி அவதூறு பரப்புவதை நிறுத்தாவிட்டால், திமுக தோழர்கள் மட்டுமின்றி, அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அதிமுகவினரும் பொங்கி எழுவார்கள் என்று நாம் நம்புவோம் என சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சனாதனம் பற்றி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு ஆகியோரைக் கண்டித்து பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது அவர், மதுரையில் 1956-இல் நடந்த தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசியதாகவும், முத்துராமலிங்கத் தேவர் ஆவேசம் அடைந்ததால் அண்ணாவும், பி.டி.ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி வந்ததாகவும் கூறினார். அண்ணாமலையின் இந்தப் பேச்சு சர்ச்சையாக வெடித்துள்ளது.
அண்ணாவின் பெயரை தாங்கி கட்சியை நடத்தும் அதிமுகவை மீண்டும் சீண்டும் வகையில் அண்ணாமலையின் பேச்சு அமைந்தது. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். ஏற்கனவே ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியது சர்ச்சையாக வெடித்து அதிமுகவினர் பொங்கி எழுந்தனர். இந்நிலையில், பேரறிஞர் அண்ணா பற்றி அண்ணாமலை பேசியது அரசியல் அரங்கில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. மதுரையில் 1956ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதை விளக்கி, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் பதிவிட்டுள்ளார்.
அண்ணாவின் கால் தூசி அண்ணாமலை எனத் தலைப்பிட் டுசுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 இல், அவரைப் பற்றிய அவதூறு ஒன்றை அள்ளிவிட்டு இருக்கிறார் அண்ணாமலை. 1956 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த விழா ஒன்றில், பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, அடுத்த நாள் அதே மேடையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக் கடுமையான சொற்களால் சாடியதாகவும், மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மீனாட்சி அம்மனுக்குப் பால் அபிஷேகத்திற்குப் பதிலாக இரத்த அபிஷேகம் நடக்கும் என்று சொன்னதாகவும், அதற்குப் பயந்து அண்ணாவும், பி.டி.ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர் என்றும் அண்ணாமலை அவதூறு பரப்பி இருக்கிறார்!
இந்தப் பொய்ச் செய்தி இரண்டு தலைவர்களுக்குமே பெருமை சேர்க்காது! ஒருவர் வன்முறையாளர் என்பதாகவும், இன்னொருவர் கோழை என்பதாகவும்தான் இதற்குப் பொருள். அண்ணாமலை சொன்ன இந்தச் செய்தியில் பாதி உண்மை, மீதி அபாண்டம்! மதுரையில் நடைபெற்ற விழாவில் அண்ணா பகுத்தறிவுச் செய்தியை பேசியதும், அதனை முத்துராமலிங்கத் தேவர் மறுநாள் கடுமையாக ப ஏசியதும் உண்மைதான். ஆனால் அண்ணா மன்னிப்பு கேட்கவும் இல்லை, தேவர் அதனைக் கோரவும் இல்லை.
ஆனாலும் வேறொன்று நடந்தது. தேவரின் பேச்சால் கோபம் கொண்ட திமுகவினர், அடுத்த வாரமே அண்ணாவை அழைத்து வந்து மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். அதில் பேசிய அண்ணா, தன் உரையின் இறுதியில், மிகுந்த கண்ணியத்தோடு "நான் மதிக்கும் தலைவர் ஒருவர், என்னைப் பற்றி அப்படிப் பேசி இருப்பது அவர் தரத்திற்கு உரியதில்லை. அதற்கு எதிர்வினை ஆற்றுகிற முறையில், நானும் கடுமையான சொற்களைக் கூறுவது என் தரத்திற்கு உரியதில்லை" என்று சொல்லி முடித்து விட்டார். அண்ணா மறுமொழி ஆற்றிய அந்தக் கூட்டத்தில், ஆயிரக்கணக்கான பார்வையாளர்களில் ஒருவராய் இருந்து அந்த உரையை நேரில் கேட்டவர், என் அப்பா காரைக்குடி இராம. சுப்பையா. அவர் சொல்லித்தான் இந்தச் செய்தியை நான் அறிந்தேன்.
அண்ணா மன்னிப்பு கேட்ட அந்தச் செய்தி, அண்ணாமலை படித்திருக்கும் 20,000 புத்தகங்களில் எந்தப் புத்தகத்தில், எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அவர் எடுத்துக்காட்டட்டும். இல்லையானால் நாளையே அவர் மன்னிப்பு கோர வேண்டும். அண்ணாவின் கால் தூசிக்கும் ஈடாகாத அண்ணாமலை போன்றவர்கள், அவரைப் பற்றி அவதூறு பரப்புவதை நிறுத்தாவிட்டால், திமுக தோழர்கள் மட்டுமின்றி, அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அதிமுகவினரும் பொங்கி எழுவார்கள் என்று நாம் நம்புவோம்!" எனத் தெரிவித்துள்ளார்.