சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று வேலூருக்கு புறப்பட்டு செல்கிறார்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காஞ்சிபுரத்தில் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று அவர் வேலூருக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார்.
வேலூரை அடுத்த கந்தனேரியில் நாளை திமுக பவள விழாவுடன் சேர்த்து முப்பெரும் விழா நடைபெற உள்ளது. காலை தொடங்கி மாலை வரை நடைபெற உள்ள இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார். அதேபோல் நாளை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் உள்ள பயனாளிகளுக்கு வீடுகளை அவர் ஒப்படைக்க இருக்கிறார்.
இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் அமைந்து இருக்கும் வேலூர் மேல்மொணவூருக்கு நாளை காலை 10.15 மணிக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், வீடுகளை வழங்குகிறார். இந்த நிகழ்வுக்காக அப்பகுதியில் மேடை அமைக்காமல், தரைத்தளம் மட்டும் அமைத்து இருக்கின்றனர். அங்கிருந்தபடியே தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டு உள்ள வீடுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
அதன் தொடர்ச்சியாக மேல்மொணவூருக்கு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் இருக்கும் வீடுகளை பார்வையிட உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பயனாளிகளிடம் சாவியை ஒப்படைக்க இருக்கிறார். அதன் பின்னர் முப்பெரும் விழா நடைபெற உள்ள கந்தனேரிக்கு அவர் செல்ல உள்ளார். அங்கு திமுகவின் கொடியை ஏற்றி வைக்கும் முதலமைச்சர், பின்னர் வேலூரில் வந்து ஓய்வெடுக்க உள்ளார்.
பின்னர் மாலை விழா மேடைக்கு அவர் செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது முதலமைச்சர் முக ஸ்டாலின், கள ஆய்விலும் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் வருகையை ஒட்டி வேலூர் மாவட்ட அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்கள்.
இந்த கூட்டத்திற்காக இன்று ரயிலில் புறப்பட்டு செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மாலை சென்னையில் இருந்து ரயிலில் புறப்பட்டு இரவு 7.30 மணியளவில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளார். அங்கு அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளார்கள்.