கன்னியாகுமரி: கன்னியாகுமரி அஞ்சுகிராமத்தில் சந்தியா என்பவரது வீட்டில் நேற்று நடந்த சம்பவம் மொத்த கன்னியாகுமரி மாவட்டத்தையும் ஆடிப்போக வைத்துள்ளது. டிவி சத்தத்தை அதிகமாக வைத்த சந்தியாவின் கணவர், 3 பைகளை தரையோடு தரையாக இழுத்து சென்றுள்ளார். என்ன இருக்கிறது எனறு தடுத்து நிறுத்தி பொதுமக்கள் சுற்றிவளைத்து நின்று பார்த்த போது, அவர்களின் ஈரக்குலையையே நடுங்க வைக்கும் விஷயம் இருந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இங்கு வசித்து வருபவர் மாரிமுத்து (வயது 36). இவருடைய மனைவி மரிய சந்தியா (வயது 30). இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். தூத்துக்குடியில் உள்ள ஒரு மீன் நிறுவனத்தில் மரிய சந்தியா பணியாற்றி வந்தார். மாரிமுத்துவுக்கு தனது மனைவி மரிய சந்தியாவின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்ததாம்.
அடிக்கடி சந்தேகப்பட்டு பேசி வந்த காரணத்தால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுமாம். மாரிமுத்து, தனது மனைவி மரிய சந்தியா மீது வெறுப்பில் இருந்தாராம். சந்தேகப்பட்டு பேசிக்கொண்டே இருந்ததால் சந்தியாவும் கணவனை கடுமையாக கண்டிப்பாராம் இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக மரிய சந்தியா வீட்டுக்கு வரவில்லையாம்.
நேற்று மதியம் மரிய சந்தியாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அஞ்சுகிராமம் நான்குவழிச் சாலை பகுதிக்கு வருமாறு அவருடைய கணவர் மாரிமுத்து அழைத்திருக்கிறார். அதன்படி அங்கு வந்த மரிய சந்தியாவை, மாரிமுத்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு வந்த பிறகும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியதாம்.
அந்த நேரத்தில் மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்த மாரிமுத்து, டி.வி.யை ஆன் செய்து அதிக சத்தத்துடன் வைத்துள்ளார். அதன்பின்னர் அரிவாளால் மரிய சந்தியாவை சரமாரியாக வெட்டி கொன்றாராம்.
பிறகு கொலையை மறைக்க திட்டமிட்ட மாரிமுத்து, மனைவியின் தலையை தனியாகவும், உடலை இரண்டு துண்டுகளாகவும் வெட்டி 3 பேக்குகளில் (பைகளில்) அடைத்திருக்கிறாராம். தொடர்ந்து அந்த பேக்குகளை தரையோடு, தரையாக இழுத்தவாறு வெளியே கொண்டு சென்றாராம். அப்போது அந்த பேக்குகளில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில், அந்த பகுதியில் நின்ற நாய், ரத்தவாடைக்கு தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்துள்ளது.
இதனால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சந்தேகப்பட்டு எழுந்து போய் பார்த்துள்ளார்கள். அப்போது மாரிமுத்து முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். பேக்கில் மாட்டு இறைச்சி இருப்பதாக மாரிமுத்து அவர்களை திசைதிருப்பியுள்ளார். ஆனாலும் பொதுமக்களுக்கு சந்தேகம் தீரவில்லை. உடனே பக்கத்து வீட்டினர் அதிரடியாக மாரிமுத்து வைத்திருந்த பேக்குகளை திறந்து பார்த்துள்ளனர்.
அப்போது பேக்குகளுக்குள் மரிய சந்தியாவின் உடல் துண்டு, துண்டாக இருப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த பேக்குகளை பறிமுதல் செய்து, மாரிமுத்துவையும் பிடித்து வைத்துக்கொண்டு போலீசுக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு அஞ்சுகிராமம் போலீசார் விரைந்து வந்து பேக்குகளில் இருந்த மரிய சந்தியாவின் உடலை கைப்பற்றி மாரிமுத்துவை அஞ்சுகிராமம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து போலீசார் மாரிமுத்துவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக மனைவியை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி 3 பேக்குகளில் அடைத்து கணவர் தூக்கிச் சென்ற கொடூர சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. சம்பவம் குறித்து அறிந்து உடனடியாக டிஎஸ்பி மகேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ஆதம்அலி, சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் ஆகியோர் நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.