டெல்லி: பீகார் சட்டசபையில் இப்போது யாருக்கு எத்தனை இடம் இருக்கிறது.. அங்கே நிலவும் அரசியல் சூழல் என்ன.. அடுத்து என்ன நடக்க வாய்ப்பு இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் தற்போது ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து உருவாக்கிய மகா பந்தன் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. இந்த கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறினால் அவர்களுக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்காது.
பீகார் சட்டசபையைப் பொறுத்தவரை இப்போது 79 எம்எல்ஏக்களுடன் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது. அவர்களை விட ஒரு இடம் குறைவாக அதாவது 78 எம்எல்ஏக்களுடன் பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கிறது. 45 எம்எல்ஏக்களுடன் நிதிஷ்குமாரின் ஜேடியு மூன்றாவது இடத்திலும் உள்ளது.
நிதிஷ்குமார்: 2020 சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து நிதிஷ்குமார் தேர்தலை எதிர்கொண்டார். அப்போது ஜேடியு கட்சியைக் காட்டிலும் பாஜகவை அதிக இடங்கள் பெற்ற போதிலும், கூட்டணி ஒப்பந்தத்தின்படி, நிதிஷ் குமார் பீகார் முதல்வரானார். இரண்டு ஆண்டுகள் கழித்து 2022இல் நிதிஷ்குமார் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு, ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சியை அமைத்தார்.
இப்போது இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் பாஜக பக்கம் செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல்களை நிதிஷ்குமார் தரப்பு உறுதி செய்யவும் இல்லை.. அதேநேரம் மறுக்கவும் இல்லை. பீகார் அரசியலில் தற்போதைய நிலை என்ன என்பது நாளை தெரிந்துவிடும்.
யாருக்கு எத்தனை இடம்: பீகாரை பொறுத்தவரை லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சிக்கு 79 இடங்கள் உள்ளன. அடுத்து 78 இடங்களுடன் பாஜக இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், நிதிஷ்குமாரின் ஆர்ஜேடி 45 இடங்கள் உள்ளன. தொடர்ந்து காங்கிரஸ் (19 சீட்கள்) சிபிஐ எம்எல் (எல்) (12 சீட்கள்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (4 சீட்கள்), சிபிஐ (எம்) (2 சீட்கள்), சிபிஐ (2 சீட்கள்), மஜ்லீஸ் (1 சீட்), சுயேச்சைகள் (1 சீட்) உள்ளன.
பீகாரில் உச்சக்கட்ட குழப்பம்.. அங்கு என்ன தான் நடக்கிறது.. வந்து விழுந்த கேள்வி.. கார்கே பரபர பதில்
பீகாரில் பெரும்பான்மைக்குக் குறைந்தது 122 இடங்கள் தேவை.. தற்போது பீகாரில் ஆளும் மகா பந்தன் கூட்டணிக்கு 159 எம்எல்ஏக்கள் உள்ளனர். இருப்பினும், நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்து வெளியே சென்றால் இந்த எண்ணிக்கை 114ஆகக் குறையும். அப்போது ஆட்சி கவிழும். அதேநேரம் பாஜக- ஜேடியு இணைந்தால் அவர்கள் பலம் 123ஆக இருக்கும். இதுபோக பாஜகவுக்கு இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆதரவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இங்கே என்ன நிலை: மறுபுறம் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணிக்குப் பெரும்பான்மைக்கு 8 எம்எல்ஏக்கள் தேவை. இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவுக்கு 4 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில், அவர்கள் கூட்டணிக்கு வந்தால் துணை முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருக்கிறார். அவர்கள் உள்ளே வரும் பட்சத்தில் 4 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே தேவைப்படும். மஜ்லீஸ் கட்சி, சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் ஆதரவும் கிடைத்தாலும் கூட 2 சீட்கள் குறைவாகவே இருக்கும்.
பீகார் மாநிலத்தில் இப்போது களநிலவரம் இப்படி தான் இருக்கிறது. நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்து வெளியேறினால் தற்போதுள்ள அரசு கவிழும் சூழலே இருக்கிறது. அங்கே வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.