திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மாருதி கார் நிறுவனத்தின் ஷோரூமில சினிமா பாணியில் கண்ணாடி கதவை உடைத்து புதிய காரை திருடி சென்றுள்ளார் இளைஞர் ஒருவர். காரை திருடிய மர்ம நபர் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் பதிவாகும் 'ஹார்டு டிஸ்குகளை'யும் தூக்கி சென்றார். நாங்கள் எல்லாம் எவ்வளவு மூளைக்காரங்கய்யா என்ற பாணியில் காரை திருடியவரை போலீசார் பிடித்தது எப்படி என்பதை பார்ப்போம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் மாருதி கார் நிறுவனத்தின் ஷோரூம் அமைந்துள்ளது. திண்டுக்கல் சாலையில் உள்ள இந்த ஷோரூமில் கார்கள் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் மையம் செயல்படுகிறது. இந்த ஷோரூமில் கார்கள் நிறுத்தப்பட்டிருப்பது வழக்கம். அதாவது வெளியில் இருந்து பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வண்ணம். முன் பகுதியில் கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும். அங்கு கண்ணாடியால் ஆன கதவுகள் இருக்கும். தினமும் வேலை முடிந்ததும் கண்ணாடி கதவை பூட்டிவிட்டு ஷோரூம் ஊழியர்கள் செல்வது வழக்கமாகும். கார் ஷோருமில் வாட்ச்மேனாக அதே பகுதியை சேர்ந்த அல்லிமுத்து என்பவர் வேலை செய்கிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஷோரூமை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்றுவிட்டார்கள். அல்லிமுத்து காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். இரவில் குளிர் அதிகம் இருந்ததால், அல்லிமுத்து அருகில் உள்ள மற்றொரு கடையின் முன்பகுதியில் தூங்க சென்றிருக்கிறார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் பணம் திருட முடிவு செய்தார். இதற்காக நள்ளிரவில் அந்த ஷோரூமின் பின்பக்க ஜன்னல் கதவை உடைத்து அதன் வழியாக உள்ளே புகுந்திருக்கிறார் அந்த மர்ம நபர்.
பின்னர் ஷோரூமில் உள்ள மேஜை டிராயரில் பணம் ஏதும் உள்ளதா? என தேடி பார்த்தார். அப்போது அங்கு கார்களின் சாவிகள் மட்டுமே இருந்தது. இதையடுத்து அதில் ஒரு சாவியை எடுத்து ஷோரூமில் நிறுத்தப்பட்டிருந்த ரூ.9 லட்சம் மதிப்பிலான புதிய காரை 'ஸ்டார்ட்’ செய்திருக்கிறார். பின்னர் சினிமா பட பாணியில் காரை ஓட்டியபடி ஷோரூமின் கண்ணாடி கதவை உடைத்திருக்கிறார். இதில் கண்ணாடி கதவு சுக்குநூறாக நொறுங்கியது. பின்னர் அவர் காரை திருடியதுடன், கீழே இறங்கி சென்று அங்கிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கையும் திருடினார். தன்னை யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று மேதாவித்தனமாக கிளம்பி திண்டுக்கல் சாலையில் தப்பி சென்றுள்ளார்.
இதனிடையே நேற்று அதிகாலை பொதுமக்கள் சிலர் அந்த ஷோரூம் வழியாக நடைபயிற்சி சென்றனர். அப்போது கார் ஷோரூம் கண்ணாடி கதவு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள் ஆயக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்தார்கள்.
ஆயக்குடி போலீஸ் விசாரணையில், பின்பக்கம் வழியாக உள்ளே வந்த மர்ம நபர் காரை திருடி சென்றது தெரிந்தது. ஷோரூமில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ய சென்ற போது, காரை திருடிய மர்ம நபர் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் பதிவாகும் 'ஹார்டு டிஸ்குகளை'யும் தூக்கி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
எனினும் மற்ற பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இருக்கும் என்பதையே மறந்துவிட்ட அந்த மூளைக்காரரை கொஞ்ச நேரத்திலே பிடித்துவிட்டனர். திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே வெள்ளமடத்துப்பட்டியில் சிவக்குமார் (வயது 25) என்பவரது வீட்டின் முன்பு புதிய கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த கார், ஆயக்குடி ஷோரூமில் திருடுபோன கார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த காரை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
மேலும் விசாரணையில், சிவக்குமார் நேற்று முன்தினம் ஆயக்குடியில் உள்ள சினிமா தியேட்டருக்கு வந்திருக்கிறார். பின்னர் அப்பகுதியில் உள்ள கார் ஷோரூமுக்குள் புகுந்து பணம் ஏதேனும் உள்ளதா? என திருட முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அங்கு பணம் எதுவும் இல்லாததால் ஷோரூமில் இருந்து காரை திருடி சென்றது விசாரணியல் தெரியவந்தது. இதையடுத்து சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர். இவர் முதல் முறை திருடர் இல்லை என்று கூறிய போலீசார். ஏற்கனவே இவர்மீது ஒட்டன்சத்திரம் பகுதியில் திருட்டு வழக்குகள் உள்ளது என்றார்கள்.
Weather Data Source: Wettervorhersage 21 tage