சென்னை: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை உள்பட பல்வேறு இடங்களுக்கு செல்லும் விமான டிக்கெட்டின் விலை என்பது 3 முதல் 5 மடங்கு வரை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.
வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதன்பிறகு அடுத்த 6 நாளில் ஆங்கில புத்தாண்டு வர உள்ளது. தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு 23ம் தேதி வரை இயங்கும். அதன்பிறகு விடுமுறை வழங்கப்படுகிறது. அதேபோல் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட உள்ளது. மீண்டும் பள்ளி, கல்லூரிகள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு முடிந்த பிறகு தான் திறக்கப்பட உள்ளது.
இனி பள்ளி, கல்லூரிகள் புத்தாண்டுக்கு பிறகு தான் திறக்கப்படும். இதனால் சென்னையில் வசிக்கும் பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவு செய்து பஸ், ரயில், விமானங்களில் டிக்கெட் முன்பதிவை தொடங்கி உள்ளனர்.இதனால் தற்போது சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் விமானங்களின் டிக்கெட் என்பது கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
விமானங்களில் பொதுமக்கள் போட்டி போட்டு டிக்கெட்முன்பதிவு செய்வதால் கட்டணம் 3 மடங்கு முதல் 5 மடங்கு வரை உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னை - தூத்துக்குடி விமான டிக்கெட் கட்டணம் ரூ.4,796ல் இருந்து ரூ.14,281 ஆக அதிகரித்துள்ளது. சென்னை - திருச்சி விமான டிக்கெட் கட்டணம் ரூ.2,382ல் இருந்து ரூ.14,387 ஆகவும், சென்னை - மதுரை விமான டிக்கெட் கட்டணம் ரூ.4,300 முதல் ரூ.17,695 ஆகவும் உயர்வு
சென்னை - கோவை விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,485 ல் இருந்து ரூ.9,418 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னை - கொச்சி விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,678 ல் இருந்து ரூ.18,377 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர சென்னையில் இருந்து கர்நாடகாவின் மைசூர், வெளிநாடானா சிங்கப்பூர், கோலாலம்பூர், தாய்லாந்து, துபாய் செல்லும் விமானங்களிலும் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த திடீர் டிக்கெட் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.