சென்னை: கோவில் சிலை திருட்டு வழக்கு ஆவணங்கள் காணவில்லை என தமிழக அரசை உச்சநீதிமன்றம் சாடியுள்ள நிலையில், இது திட்டமிட்ட சதிச் செயலா? என கேள்வி எழுப்பியுள்ள இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழகத்தில் ₹300 கோடி மதிப்பிலான 41 சிலைகளை கடத்திச் சென்ற வழக்குகளில் உள்ள ஆவணங்கள் காவல் நிலையங்களில் இருந்து காணாமல் போய் உள்ளன.
இது சம்பந்தமான வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் தமிழக அரசை கண்டித்ததோடு மட்டுமல்லாமல் தமிழக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆலயங்களை நிர்வகிக்கும் இந்து சமய அறநிலைத்துறை ஆலயத்திற்கு வரும் பக்தர்களிடம் பணம் வசூல் செய்வது மட்டுமே நோக்கமாக செயல்பட்டு வருகிறது. ஆலயங்களையோ ஆலயங்களில் உள்ள சிலைகளையோ பாதுகாக்கும் எண்ணம் துளி அளவும் இல்லை. அதன் காரணமாகத்தான் பல ஆலயங்களில் உள்ள சிலைகள் திருடு போய் அது இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையிலேயே இருந்து வருகிறது.
சிலைகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள தமிழக அரசும் தமிழக காவல்துறையும் இதனை நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறையும் மெத்தனமாக இருந்து வருவதை விட அதனைக் கண்டுபிடிக்க போடப்பட்ட 41 வழக்குகளின் ஆவணங்கள் காவல் நிலையத்திலேயே காணாமல் போயுள்ளது என்ற அவலம் அரங்கேறி இருப்பது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயமாகும்.
தமிழக அரசாலும் , காவல்துறையாலும் வழக்கு ஆவணங்களையே பாதுகாக்க முடியவில்லை என்றால் எப்படி இவர்கள் ஆலயத்தையும், ஆலய சிலைகளையும் பாதுகாப்பார்கள். தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் சிலை திருட்டு வழக்கில் உள்ள ஆவணங்களை பாதுகாக்க தவறிய காவல்துறை அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த விஷயத்தில் மெத்தனமாக இருந்த தமிழக அரசையும் இந்து சமய அறநிலைத்துறையும் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது." என கூறியுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிலை கடத்தல் வழக்குகளில் எஃப்ஐஆர் உள்ளிட்ட 41 முக்கிய ஆவணங்கள் காவல் நிலையங்களில் இருந்து காணாமல் போனது அதிர்ச்சி அளிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியதோடு இது தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது. மேலும் தமிழக அரசின் உள்துறை செயலர் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து வரும் 2024ஆம் ஆண்டும் ஜனவரி 31ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
மொத்தம் 41 கோப்புகளில் 21 கோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு 11 வழக்குகள் புதிய எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதையும் நீதிமன்றம் கண்டுபிடித்த நிலையில், புதிதாக பதிவு செய்யப்படும் எஃப்ஐஆர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒரு தற்காப்பாக மாறும் என கூறியதோடு புதிய எஃப்ஐஆர்-களை பதிவு செய்தது எப்படி எனவும் கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் யானை ஜி.ராஜேந்திரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, திருட்டு சம்பவங்கள் பல ஆண்டுகளுக்கு முன் நடந்துள்ளன எனவும், சம்பந்தப்பட்ட சிலைகள் சர்வதேச சந்தையில் ரூ.300 கோடிக்கு மேல் மதிப்புள்ளவை. இந்த வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என வாதாடிய நிலையில், மாநில உள்துறைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் ஜெனரல், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் சிலை திருட்டுப் பிரிவுக்கு தலைமை தாங்கும் கூடுதல் டிஜிபி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2023 பிப்ரவரியிலேயே நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.