வேண்டுதலை நிறைவேற்றிய திருப்பதி ஏழுமலையான்.. 108 தங்கத்தாமரை

post-img

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு அர்ச்சனை செய்ய கடப்பாவை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.2 கோடி மதிப்புள்ள 108 தங்கத் தாமரை மலர்களை காணிக்கையாக வழங்கினார்.


ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து மனமுருகி வேண்டுதல் வைக்கின்றனர். திருமலையில் தரிசனம் செய்ய ஒரு வருட காலத்தில் ஏறக்குறைய மூன்று கோடி பக்தர்கள் வருகை புரிகிறார்கள். மத வித்தியாசங்கள் கருதாமல் ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர் பக்தர்கள்.
ஏழுமலையானுக்கு தினசரியும் பலவிதமான சேவைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலையிலும் அஷ்டதள பாத பத்ம அர்ச்சனை செய்யப்படுவது திருமலை தேவஸ்தானத்தின் நடைமுறை. தெய்வத் திருமேனிகளுக்கு அர்ச்சனை செய்ய இயற்கையாகவே மலர்ந்த பூக்களை அப்போது பயன்படுத்தப்படுவார்கள்!
ஏழுமலையானுக்கு தங்கத்தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வார்கள். ஒவ்வொரு திருநாமம் ஒன்றுக்கு ஒரு தங்கத் தாமரை மலர் வீதம் 108 தங்கத் தாமரை மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சேவை 'அஷ்டோத்தர ஸ்வர்ண பாத பத்ம ஆராதன சேவை' என்று அழைக்கப்படுகிறது.
108 தங்க மலர்கள் கொண்டு திருவேங்கடவனுக்கு அர்ச்சனை செய்யும் 'அஷ்டதள ஸ்வர்ண பாத பத்ம ஆராதனை' ஆர்ஜித சேவையாக 1984-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அது திருமலை தேவஸ்தான நிர்வாகத்தின் பொன் விழா ஆண்டில் அனைவரின் நினைவிலும் நிற்கக்கூடிய ஆர்ஜித சேவையாகவும் இருந்தது.

அதன்படி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் அதிகாலை சுப்ரபாத சேவை, தோமால சேவை முடிந்து, நைவேத்தியத்தின்போது 'கண்டாநாதம்' எனப்படும் மிகப்பெரிய மணி ஒலிக்கப்படுகிறது. பின்னர் திருவேங்கடவனுக்கு காலை 6 முதல் 7 மணி வரை 108 அர்ச்சனை செய்யப்படுகிறது. 'சஹஸ்ர நாம அர்ச்சனையை யார் செய்தாலும், பார்த்தாலும், கேட்டாலும் சர்வ தோஷங்களும் நீங்கிவிடும்' என்று நாரத மகரிஷியால் அருளப்பட்டுள்ளது.
வேங்கடவனின் 108 திருநாமங்களை ஒருவர் உச்சரிக்கும்போது, கருவறையில் மூலவர் ஏழுமலையான் திருப்பாதங்களுக்கு கீழ் உள்ள பீடத்தில் அர்ச்சகர் அமர்ந்துகொண்டு ஒரு திருநாமத்துக்கு ஒரு மலர் வீதம் 108 தங்க மலர்களை அர்ச்சிப்பார். எட்டு இதழ்கள் கொண்ட அந்த தங்கத் தாமரை ஒவ்வொன்றும் 23 கிராம் கொண்டது!
திருப்பதி ஏழுமலையானிடம் மனம் உருகி வேண்டிக்கொண்டால் அவை நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவார் ஏழுமலையான். அப்படி வேண்டுதலை நிறைவேற்றிய ஏழுமலையானுக்கு பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் நடைபெறும் அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவைக்காக ரூ.2 கோடி மதிப்பிலான 108 தங்க தாமரை மலர்களை பிரபல நகைக்கடையில் பிரத்யேகமாக வேலைபாடுகளுடன் தயாரிக்கப்பட்டன.
நேற்று இந்த தங்க தாமரை மலர்களை கடப்பாவை சேர்ந்த நன்கொடையாளர் ஜுவல்லரி நிறுவன தலைவருடன் இணைந்து ஏழுமலையான் கோயிலிலுக்கு வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று வழிபாடு செய்தனர். பின்னர் அர்ச்சகர்களால் தங்க தாமரை மலர்கள் சுவாமியின் பாதத்தில் வைக்கப்பட்டு ஆசி பெற்ற பிறகு கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

 

Related Post