தற்போது மாம்பழ சீஸன். இதனால் எங்கும் மாம்பழங்களாக காணப்படுகிறது. மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் உள்ள துப்ராஜ்பூர் என்ற இடத்தில் இருக்கும் மசூதியின் வளாகத்தில் அபூர்வமான மாமரம் ஒன்று இருக்கிறது. இம் மாமரக்கன்றை மசூதிக்குக் கொண்டு வந்த ஒருவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நட்டுள்ளார்.
மியாசாகி மாம்பழம்
இப்போது அந்த மாமரத்தில் காய்கள் காய்த்து பழங்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இந்த மாம்பழங்கள் மிகவும் அபூர்வமாக இருக்கின்றன. ஆரம்பத்தில் எல்லோரும் இதைச் சாதாரண மாமரமாகத்தான் பார்த்தனர். பழம் பழுக்க ஆரம்பித்த பிறகுதான், அதன் நிறம் எரியும் நெருப்பைப் போன்று இருந்தது. உடனே அது எந்த ரகம் என்று விசாரித்தபோது ஜப்பானில் மட்டுமே விளையக்கூடிய உலகிலேயே அதிக விலையுள்ள மாம்பழம் என்று தெரிய வந்தது. இதை மியாசாகி மாம்பழம் என்றும், சூரியனின் முட்டைகள் என்றும் இந்த மாம்பழத்தை அழைக்கின்றனர்.
இது குறித்த செய்தி அப்பகுதி முழுவதும் பரவியது. உடனே ஏராளமான மக்கள் வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். அதோடு ஒவ்வொருவரும் தங்களுக்கு இந்த மாம்பழம் வேண்டும் என்று கேட்டனர். உடனே அந்த மாம்பழத்தை மசூதி நிர்வாகம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏலம் விட ஆரம்பித்துள்ளது. நேற்றுமுன்தினம் ஏலம் விட்டபோது ஒரு மாம்பழத்தை உள்ளூர் வியாபாரி 10,600 ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். இந்த மாம்பழ ஏலத்தின் மூலம் மசூதிக்கு லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வருமானத்தை மசூதி மேம்பாட்டுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மசூதி கமிட்டி தலைவர் காஜி அபு தலேப் கூறுகையில், ``இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவர் இந்த மாமரக்கன்றைக் கொண்டு வந்து நட்டார். அவர் இப்போது இறந்துவிட்டார். அவருக்கு இந்த மாங்கன்று எங்கு கிடைத்தது என்று தெரியவில்லை என்றார். தற்போது மாமரத்தில் 9 மாங்காய்கள் மட்டுமே இருக்கின்றன. அதை ஒவ்வொரு வாரமும் ஒன்று என்ற விகிதத்தில் ஏலம் விட மசூதி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒரு கிலோ மாம்பழம் 3 லட்சம் வரை விற்பனையாகிறது" என்றார்.