"சின்ன கல்லு பெரிய லாபம்.." தங்கத்தை விட வைரத்தில் லாபத்தை அள்ள முடியுமா! ஆனந்த் சீனிவாசன் நறுக்

post-img
சென்னை: தங்கம் விலை கடந்த சில காலமாகவே ராக்கெட்டில் ஏறி உச்சத்திற்குப் போய்க் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் தங்கத்தைப் போல வேறு எதில் எல்லாம் லாபம் கிடைக்கும் என்பது தொடர்பாகப் பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். அதில் முக்கியமானது வைரம்.. தங்கத்தை விட வைரத்தில் லாபத்தை அள்ளலாம் என்று பொதுமக்கள் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் வைரத்தில் எந்தளவுக்கு லாபம் கிடைக்கும் என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். இந்த காலத்தில் பொதுமக்கள் மெல்லச் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து முதலீடு தொடங்கியுள்ளனர். முதலீடு நல்ல விஷயம் தான் என்றாலும் அதைச் சரியாகச் செய்ய வேண்டும். வைரம்: நம்ம ஊரில் பொதுமக்கள் பெரும்பாலும் தங்கத்திலேயே முதலீடு செய்வார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் விலை தொடர்ந்து ராக்கெட்டில் உயர்ந்து வருவது இதற்கு முக்கிய காரணம். அதேநேரம் இப்போது சிலர் தங்கத்தைப் போலவே வைரத்திலும் முதலீடு செய்யலாமே யோசித்து வருகிறார்கள். பஞ்சதந்திரம் படத்தில் வருவது போல "சின்ன கல்லு பெரிய லாபம்" என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை தானா.. வைரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்குமா என்பது பலருக்கும் தெரியாது. இப்போது வைர மார்கெட் எப்படி இருக்கிறது.. அதில் முதலீடு செய்யலாமா என்பது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ளார். ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "தங்கம் ஏற்கனவே ராக்கெட்டில் ஏறிவிட்டது. இது ஒரு பக்கம் இருக்க வைரம் குறித்து நாம் பார்க்கலாம்.. வைரம் குறித்து இங்கே பாட்டெல்லாம் இருக்கிறது. வைரத்தில் முதலீடு செய்தால் சிறப்பாக இருக்கும் என்று பலரும் சொல்லிக் கேட்டு இருப்போம். ஆனால், உண்மையில் கடந்த ஓராண்டில் மட்டும் வைரம் விலை சுமார் 14-15% வரை குறைந்துள்ளது. சமீப காலங்களில் வைரத்தின் விலை வேகமாகவே குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமே செயற்கையாக உருவாக்கப்படும் வைரங்கள் தான். இப்போதெல்லாம் எது செயற்கை வைரம் எது இயற்கையான வைரம் என்று கண்டுபிடிப்பதே சிரமமாக இருக்கிறது. அந்தளவுக்குச் செயற்கை வைரத்தின் தரம் உயர்ந்துவிட்டது. இதுவே வைரத்தின் விலை குறையக் காரணமாக இருக்கிறது. கடும் நஷ்டம்: உதாரணத்திற்குக் கடந்தாண்டு தொடக்கத்தில் நீங்கள் ஒரு லட்ச ரூபாயை வைரத்திலும், பங்குச்சந்தையிலும் முதலீடு செய்து இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்படிப் போட்டு இருந்தால் பங்குச்சந்தையில் உங்களுக்கு ரூ. 1.25 லட்சம் கிடைத்து இருக்கும். அதேநேரம் வைரத்தில் அது ரூ. 80 ஆயிரமாகக் குறைந்து இருக்கும். எனவே, வைரத்தின் பின்னால் யாரும் ஓட வேண்டும். இன்னுமே கூட பெரிய பிரச்சினை வரலாம்.. சரி இதனால் தங்கத்திற்கு எதாவது பிரச்சினை வருமா என நீங்கள் கேட்கலாம்.. இல்லை தங்கத்திற்கு எல்லாம் எந்தவொரு பிரச்சினையும் வராது. தங்கத்திற்குப் பிரச்சினை வர வேண்டும் என்றால் ஆய்வாளர்கள் (alchemist) யாராவது மற்ற உலோகங்களைத் தங்கமாக மாற்றும் முறையைக் கண்டுபிடிக்க வேண்டும். தங்கத்திற்கு ஆபத்தா: ஆனால், அது ரொம்பவே கஷ்டம். தங்கம் என்பது இயற்கையாகக் கிடைக்கும் ஒரு விஷயம். அதைச் செயற்கையாக எல்லாம் தயாரிக்க முடியாது. எனவே, தங்கத்தின் மதிப்புக்கு இப்போதைக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை. அதேநேரம் வைரத்தை வாங்கி இருந்தால் நீங்கள் பெரிய பிரச்சினையில் சிக்கி இருப்பீர்கள். வைரத்திற்குத் தனி இன்டெக்ஸ் (இப்போது நிஃப்டி இன்டெக்ஸ்) போல இருக்கிறது. அது கடந்த ஓராண்டில் மட்டும் 15 முதல் 20% வரை குறைந்தது. இதே காலகட்டத்தில் பங்குச்சந்தை, தங்கம் ஆகியவை அதிகரித்துள்ளது. எனவே, ஏதோ முதலீடு செய்கிறேன் என நினைத்துக் கொண்டு வைரத்தில் முதலீடு செய்தால் ஆபத்து. அப்போது யாரும் நம்மைக் காப்பாற்ற வர மாட்டார்கள்" என்றார் இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Related Post