கோவை: கோவை ஈஷா யோக மையத்தின் நிறுவனரான ஜக்கி வாசுதேவ் இன்று அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் கோவை திரும்பிய நிலையல், ஜக்கி வாசுதேவை கண்டித்து அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலின் அருகில் அமைந்துள்ளது ஈஷா யோக மையம். கோவையின் அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போன இந்த ஈஷா யோக மையத்திற்கு, உள்ளூர் மட்டுமன்றி வெளிமாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்தோரும் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம்.
இங்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவால் வடிவமைக்கப்பட்டு, கடந்த 2017 ஆம் ஆண்டு ஆதியோகி சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி இந்த ஆதியோகி சிவன் சிலையைத் திறந்து வைத்தார். ஆதியோகியை காண தமிழகம் மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதியில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர்.
இந்த யோகா மையத்தில் யோகா பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. மஹா சிவராத்திரி அன்று பிரமாண்டமான நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்காக உலகம் முழுவதும் இருந்தும் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஆதியோகியை தரிசிக்க வருகை தருவர்.
ஈஷா யோக மையம் தொடர்பான பல்வேறு புகார்கள், சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கின்றன. சந்தேகத்திற்குரிய வகையில் ஈஷா யோக மையத்தில் மர்ம மரணங்கள், வனப் பகுதி ஆக்கிரமிப்பு, மின்சார வேலி அமைத்ததால் வனவிலங்குகள் உயிரிழப்பு, பாலியல் புகார்கள் என தொடர்ந்து சர்ச்சை எழுந்து கொண்டே வருகின்றன.
இந்நிலையில், ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவை கண்டித்து அனைத்து முற்போக்கு இயக்கத்தினர் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீளமேடு விமான நிலையம் இணைப்பு சாலை அருகே கையில் கருப்புக் கொடிகளுடன் போராட்டம் நடைபெற்றது. தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடிகளுடன் பங்கேற்றனர்.
ஈஷா கோவையின் அவமானம், மர்மதேசம். ஈஷா மீதான புகார்களை விசாரிக்க வேண்டும். ஈஷா மையத்தை மூட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவுக்கு எதிராகவும், ஈஷா யோகா மையத்திற்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
சமூக மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களும் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் ஜக்கி வாசுதேவுக்கு எதிராக கடுமையான முழக்கங்களை எழுப்பினர். ஜக்கியை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றும் வரை ஓய மாட்டோம் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் அவர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ஜக்கி வாசுதேவைக் கண்டித்து நடத்தப்பட்ட இப்போராட்டங்கள் காரணமாக, விமான நிலையத்தில் இருந்து காளப்பட்டி செல்லும் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.